India USA Trade: அப்ப உக்ரைன் மேல அக்கறை இல்லை.. பால், சோளம் வாங்காதது தான் பிரச்னையா? ட்ரம்பின் 50% வரி முடியுமா?
India USA Trade: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது.

India USA Trade: இந்தியா வரிகளின் மகாராஜாவாக திகழ்வதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவேரா மீண்டும் விமர்சித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவிகித வரி காரணமாக, இந்தியா உடனான உறவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் ஒருநாள் பயணமாக டெல்லி வந்தடைந்துள்ளார். இவருடனான இன்றைய பேச்சுவார்த்தைக்கு, இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளருமான ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்க உள்ளார்.
50 சதவிகித வரிக்கு முடிவு?
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு அரசாங்கங்களாலும் முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) கீழ் ஒரு இடைக்கால ஏற்பாட்டை இறுதி செய்வதை இன்றைய பேச்சுவார்த்தை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை அக்டோபர்-நவம்பர் 2025 க்குள் முடிப்பதே இதன் நோக்கம். கோடிக்ககணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் விவசாயம் மற்றும் பால்வளம் ஆகியவற்றின் பங்கு, இந்திய அரசின் மிகவும் முக்கியமான துறைகளாகவே உள்ளன. அவற்றை அமெரிக்க பொருட்களுக்கு திறந்துவிடுவது குறித்த விவாதம் முக்கிய பங்கை வகிக்கக் கூடும். இதுபோக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவிகித வரியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீட்டர் நவேரா ஆவேசம்:
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் நிலையில், ட்ரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவேரா இந்தியாவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், உக்ரைன் மீதான புதினின் படையெடுப்புக்குப் பிறகு உடனடியாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்தன. அவர்கள் நியாயமற்ற வர்த்தகம் மூலம் எங்களிடமிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பல தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் அந்தப் பணத்தை ரஷ்ய எண்ணெயை வாங்கவும், ரஷ்யர்கள் அதைப் பயன்படுத்தி ஆயுதங்களை வாங்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்தியா பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது. வர்த்தகப் பக்கத்தில், அவர்கள் மிக அதிக வரிகளைக் கொண்டு வரிகளின் மகாராஜாவாக இருக்கின்றனர்" என்று நவேரா சாடியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே இவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
”சோளம் வாங்கமாட்றாங்க..”
முன்னதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வரி நடவடிக்கைகள் குறித்து விரக்தியை வெளிப்படுத்தினார். அதன்படி "இந்தியா 140 கோடி மக்களைக் கொண்டிருப்பதாக பெருமை பேசுகிறது, ஆனால் ஒரு சிறிய அளவு அமெரிக்க சோளத்தை கூட வாங்காது. அமெரிக்க பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படாவிட்டால் வாஷிங்டனுடனான அதன் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கடினமான நேரத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது” என லுட்னிக் எச்சரித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் பால் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிடாததன் காரணமாகவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்து அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது அந்நாட்டின் அமைச்சரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.





















