Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 72 மணி நேரம், 6 கண்டிஷன் - நினைத்ததை அடைவாரா ட்ரம்ப்? தவிப்பில் மாணவர்கள்
Harvard University Trump: ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 72 மணி நேரத்தில் 6 விதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, வெளிநாட்டு மாணவர்களை அங்கு சேர்க்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

Harvard University Trump: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமத்தை, அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்:
அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், நடப்பு 2025-26 கல்வியாண்டில் புதிய வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமத்தை இழந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்திற்கான மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் திட்ட சான்றிதழை (SEVP), அந்நாட்டு அரசின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ரத்து செய்ததே காரணமாகும். இதன் விளைவாக F-1 மற்றும் J-1 விசாக்கள் அடிப்படையில் புதிய வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முடியாது என்பதோடு, தற்போது அங்கு பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வேறொரு கல்வி நிலையங்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
அரசு சொல்வது என்ன?
இதுதொடர்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அரசு எழுதியுள்ள கடிதத்தில், “அனைத்து பல்கலைக்கழகங்களும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையுடன் இணக்கமாக செயல்படுவதோடு, மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் திட்டம் (SEVP) தொடர்பாக நாங்கள் கோரும் விவரங்களை வழங்கவேண்டும். ஆனால் அந்த தகவல்களை வழங்க மறுத்ததோடு, ஜுஸ் மாணவர்கள், ஹமாஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை கொண்டு பாதுகாப்பற்ற கல்வி நிலையத்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான உங்களது அனுமதியை ரத்து செய்கிறோம். இந்த அந்தஸ்து மீண்டும் வேண்டுமானால் அடுத்த 72 மணி நேரத்திற்குள், குறிப்பிட்ட 6 விதிகளை பூர்த்தி செய்வதோடு, கேட்கப்பட்ட விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்” என உள்நாட்டு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
6 விதிகள்..72 மணி நேரம்..
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 6 விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,
- கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹார்வர்டில் சேர்ந்த வெளிநாட்டு (Non - Immigrant) மாணவர்கள் சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் அல்லது வெளியே அரங்கேறிய "சட்டவிரோத நடவடிக்கை" தொடர்பான மின்னணு மற்றும் ஆடியோவிஷுவல் உட்பட அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே அல்லது வெளியே, வெளிநாட்டு மாணவர்களால் அரங்கேறிய "ஆபத்தான அல்லது வன்முறைச் செயல்பாடு" தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்
- மற்ற மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு எதிராக "வெளிநாட்டு மாணவர்களால் செய்யப்படும் அச்சுறுத்தல்கள்" தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும்
- வளாகத்திற்குள்ளோ அல்லது வவெளியேயோ, வெளிநாட்டு மாணவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பறித்திருக்கக்கூடிய சம்பவங்களின் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்
- கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹார்வர்டில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் அனைத்து ஒழுங்குமுறை பதிவுகளையும் வழங்க வேண்டும்
- கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹார்வர்ட் வளாகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் ஈடுபட்ட போராட்ட நடவடிக்கைகளின் ஆடியோ அல்லது வீடியோ காட்சிகளையும் வழங்க வேண்டும் என அரசு கெடு விதித்துள்ளது.
தவறான தகவல்கள் கொடுத்தால் பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















