தொடரும் துப்பாக்கிச்சூடு...மேயர் உள்பட 18 பேர் கொடூர கொலை...மெக்சிகோவில் நடந்தது என்ன?
இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நகராட்சி மண்டபம் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், சரமாரியாக சுட்டதில் மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை குரேரோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆயுதமேந்திய குழு, முகமூடிகளை அணிந்து இரண்டு எஸ்யூவி வாகனங்களை ஓட்டி வந்துள்ளனர். மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மேயருமான ஜுவான் மெண்டோசாவை அவர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள பாதிக்கப்பட்ட பத்து பேரில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் ஆவர்.
ஆளும் மொரீனா கட்சியின் உறுப்பினரான குரேரோ ஆளுநர் ஈவ்லின் சல்கடோ பினெடா, இந்த கொடூர சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அவசர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டார். "நகராட்சி தலைவர் மற்றும் உள்ளூர் அரசாங்க அலுவலர்களுக்கு எதிரான தீங்கிழைக்கும் செயலை செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக்கூடாது" என சல்கடோ பினெடா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், கோலிமா மாநிலத்தில் போதை பொருளை கடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜாலிஸ்கோ நியூவா ஜெனரேசியன் கார்டெல் என்ற தீவிரவாத கும்பலின் தலைவரும் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அங்கு கும்பல் வன்முறைகள் வெடித்தன.
மத்திய மெக்சிகோவில் உள்ள 25க்கும் மேற்பட்ட கடைகள் எரித்து நாசப்படுத்தப்பட்டன. பல கார்களுக்கு கொளுத்தப்பட்டு தீக்கிரையாகின.
இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சான் மிகுவல் டோடோலாபன், மெக்சிகோவின் சுற்றுலாத் தலமான அகாபுல்கோ உள்ள அதே மாநிலத்தில் உள்ளது. குரேரோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், இது தொடர்பாக இன்னும் பதிலளிக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலர்கள், மாநில மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் சேர்ந்து, காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளனர் என குரேரோவின் பொதுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தாய்லந்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் பல்வேறு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த காப்பகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்த்து அங்கிருந்த குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், அங்கிருந்து தப்பித்து சென்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தனது மனைவி மற்றும் குழந்தை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















