தொடரும் குண்டு மழை: கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்.. அடையாளம் காண உடலில் பெயர் எழுதும் துயரம்
காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,500 குழந்தைகள் உள்பட 7,703 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
நாலா புறமும் தாக்குதல்:
இதுநாள் வரை, வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நிலத்தின் வழியேயும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது.
காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது. சாரா அல்-காலிடி என்ற பெண், தால் அல்-ஹவா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்:
அங்கு, நேற்று இரவு முழுவதும் குண்டுகள் வீசப்பட்டு வந்ததால் கான் யூனிஸ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி, அவர் சென்றுள்ளார். ஆனால், உறவினர் வீட்டில் சாரா பார்த்த சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலில் மரணம் அடைந்துவிட்டால், அடையாளம் காண்பதற்காக குழந்தைகளின் உடலில் அவர்களது உறவினர்கள் பெயர் எழுதுவதை பார்த்து துயரத்தில் ஆழ்ந்துள்ளார்.
தானும், தனது குழந்தைகளின் உடலில் பெயர் எழுதினால் அது துரதிஷ்டமாத மாறிவிடும் என எண்ணியுள்ளார். ஆனால், அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், குழந்தைகளின் உடலில் பெயர் எழுதுவதை கண்டு, மனம் மாறியுள்ளார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர், "காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்படும் இந்த குழந்தைகள் வெறும் எண்கள் அல்ல. பெயர்கள் அல்ல. கதைகள் மற்றும் கனவுகள். கொல்லப்பட்ட இந்த குழந்தைகளைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
நேற்று இரவு, காசா முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை இஸ்ரேல் துண்டித்துள்ளது. இது, போர் குற்றம் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் - காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் - தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு காசாவில் வசிப்பவர்கள், தெற்கே தப்பிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர்.