Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மீண்டும் அணிக்குள் கொண்டு வர, பிசிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohammed Shami: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நெருங்கி வரும் சூழலில், முகமது ஷமி விரைவிலேயே இந்திய அணியில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
இந்திய அணியில் மீண்டும் ஷமி:
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஒராண்டு மட்டுமே உள்ளது. இந்நிலையில் நட்சத்திர வேகபந்து வீச்சாளரான முகமது ஷமியை மீண்டும் அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ பரிசீலித்து வருகிறதாம். கடந்த சில மாதங்களாகவே 35 வயதான வேகப்பந்து வீச்சாளரின் உடற்தகுதி, செயல்திறன் மற்றும் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தேர்வுக்குழுவினர் தற்போது நெருக்கமாக கணிகாணித்து வருகின்றனராம். என்டிடிவி வெளியிட்டுள்ள செய்திகளின்படி, உள்ளூர் போட்டிகளில் ஷமியின் செயல்பாடு உற்று கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
U-டர்ன் போடும் பிசிசிஐ?
வெளியாகியுள்ள பிசிசிஐ வட்டார தகவலின்படி, “முகமது ஷமியின் பெயர் தொடர்ந்து பரிசீலிக்கப்படுகிறது. அவர் கணக்கில் வராதவர் அல்ல. அவரது உடற்தகுதி குறித்து மட்டுமே கவலை நிலவுகிறது. அவர் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவர் தேர்வுக் குழுவிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்வது தவறு. நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு அவர் சிறப்பாக இருக்கிறார். அவரது அனுபவத்தையும் அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனையும் கருத்தில் கொண்டு, அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். 2027 உலகக் கோப்பை கூட ஒரு சாத்தியமாகும்" என கூறப்படுகிறது.
ஷமியின் கடைசி போட்டி:
கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்ற ஷமி, 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியே, அவர் கடைசியாக விளையாடியதாகும். அதேநேரம், அவர் டெச்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 2023ம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டும் கூட, ஷமிக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கப் பெறாதது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஷமி:
ஷமியின் கிரிக்கெட் என்பது இன்னும் முடியவில்லை, காரணம் உள்ளூர் போட்டிகளில் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காரணம் கடைசியாக விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டக் அலி கோப்பைகளில் விளையாடிய தலா 3 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஞ்சி கோப்பையில் விளையாடிய 4 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் தனது விக்கெட் வீழ்த்தும் திறன் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார். ஆனாலும், அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டபோது கூட, ஷமிக்கு வாய்ப்பளிக்கப்படாதது ஏன்? என வினவி வருகின்றனர்.
ஐசிசி போட்டிகளில் அசத்தும் ஷமி:
ஐசிசி போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஷமி திகழ்கிறார். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே 55 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் 2027ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், அவரது அனுபவம் இந்திய அணிக்கு அவசியமானதாக கருதப்படுகிறது. அதற்கு தயாராகும் விதமாக விரைந்து இந்திய அணிக்குள் கொண்டு வந்து, ஷமிக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.




















