உலகளவில் உற்பத்தியாகும் உணவு... ஒரே ஆண்டில் மட்டும் இத்தனை பங்கு வீணாகிறதா..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...!
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.
உணவினை வீணாக்க வேண்டாம். சிறு வயதில் இருந்தே மூத்தவர்கள் அனைவரும் இளையவர்களுக்கு வழங்கும் பொதுவான அறிவுரையாக இது இருந்து வருகிறது. ஏன் அப்படி சொல்கிறார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? ஏனெனில், உணவினை வீணடிப்பது தவறான செயலாகும்.
இயற்கை வளத்தை வீணடிப்பது மட்டும் இன்றி, சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய காலநிலை மீது அது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இச்சூழலில், உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட உணவு வீண் குறியீட்டு அறிக்கை 2021இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான விரிவான அறிக்கையில், "இதற்கான சான்றுகளை புறக்கணிப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. காலநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் இழப்பு, மாசு, கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் முக்கியமானது.
மனித இனத்தால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கு மிக பெரிய அளவில் உணவு வீணடிக்கப்படுவதால் நிகழ்கிறது.
அதுமட்டும் இன்றி, 86 சதவீதத்திற்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதால் விவசாயம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விரயத்தால் உலகம் முழுவதும் பாரிய உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுத்தியுள்ளது"
வீடுகளில் உணவு பொருள்கள் வீணடிப்பது உலகளவில் மிக பெரிய சவாலாக உள்ளது. எனவே, அன்றாட வாழ்வில் உணவு வீணாவதைக் குறைக்க ஒருவர் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அந்த அமைப்பு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. 2014 முதல் பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், உணவு வீணடிக்கப்படுவதை குறைப்பது அவசியமாகிறது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
வீட்டில் உணவு வீணடிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி?
- ஒரு வாரத்திற்கு எவ்வளவு உணவு பொருள்கள் மிச்சமாகிறது என்பதை கணக்கிட்டு வைத்து கொள்ளுங்கள்.,
- ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருள்களை பட்டியிடுங்கள். ஒரே அடியாக அதிகமான உணவு பொருள்கள் வாங்குவதை தவிருங்கள்.
- உங்களுக்கான பழம் மற்றும் காய்கறிகளை நீங்களே விளைவியுங்கள்.
- மீதமுள்ள உணவுக் கழிவுகள் மற்றும் சாப்பிடக்கூடாத பாகங்களை உரமாக்குங்கள்.