தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
இந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் உள்ளூர் காவல்துறைத் தலைவர் தட்சபோன் சின்னவோங் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, “பாங்காக்கிலிருந்து தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்திற்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாங்காக்கிலிருந்து வடகிழக்கே 230 கிமீ தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சீகியோ மாவட்டத்தில் உள்ள பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பெட்டிகளில் ஒன்றின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததால் தடம் புரண்டது.
இந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் உள்ளூர் காவல்துறைத் தலைவர் தட்சபோன் சின்னவோங் கூறியுள்ளார். இந்த ரயிலானது தாய்லாந்தின் உபோன் ரட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது என தெரிய வந்துள்ளது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக வழியில் கிரேன் நிறுத்தப்பட்டிருந்த நிலஒயில் ரயில் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக சரிந்து விபத்தை ஏற்படுத்தியது என தெரிய வந்தது.
இந்த கோர விபத்தில் ரயில் தடம் புரண்டதோடு மட்டுமல்லாமல் தீப்பிடித்தது. உடனடியாக விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டது. விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Video clip from the scene of the serious train accident today when a crane fell onto a passenger train at a construction site in Nakhon Ratchasima province. Multiple deaths reported.
— Thai Train Guide (@ThaiTrainGuide) January 14, 2026
Video released by @PR_SRT #Thailand pic.twitter.com/AOP2Ng7ESR
தீயணைப்பு வீரர்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழு, உள்ளூர் காவல்துறையினர் என 4 குழுக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாய்லாந்து அரசின் மக்கள் தொடர்புத் துறை, சமூக ஊடகங்கள் மூலம் இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் சுமார் 195 பயணிகள் இருந்தனர் என தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் பிபாட் ரட்சகிட்பிரகார்ன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.





















