US China: ”எங்ககிட்ட வந்து மிரட்டுறது எல்லாம் நல்லதுக்கு இல்லை” ட்ரம்பின் 100% வரி விவகாரம் - கடுப்பான சீனா
US China: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவிகித வரி என்ற மிரட்டல் நடவடிக்கை நல்லதல்ல என, சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

US China: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவிகித வரி நடவடிக்கைக்கு, சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு:
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா மீது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 100 சதவிகிதம் வர்த்தக வரி விதித்துள்ளார். சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிய வகை கனிம வளங்கள் மீது, கூடுதல் வரியை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதுதொடர்பாக சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது” என சாடப்பட்டுள்ளது.
”மிரட்டுவது சரி அல்ல”
மேலும், ”அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் நலன்களுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன, மேலும் இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளன. ஒவ்வொரு சூழலிலும் அதிகப்படியான வரியை விதிப்பதாக அச்சுறுத்துவது சீனாவுடன் ஈடுபடுவதற்கான சரியான அணுகுமுறை அல்ல. வரி விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது. நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட நாங்கள் பயப்படவும் இல்லை. மாட்ரிட்டில் நடந்த அமெரிக்கா-சீனா பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது"” என சீனாவின் வர்த்தக அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பரஸ்பரம் குற்றச்சாட்டு:
வரி நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை ரத்து செய்வதாகவும் ட்ரம்ப் மிரட்டியுள்ளார். இதனிடையே, செப்டம்பர் மாதத்திலிருந்து சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருவதாக பீஜிங் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?
சீனாவின் வர்த்தக அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ், எந்தவொரு நிறுவனமும், சீன அல்லது வெளிநாட்டு நிறுவனம், 0.1% க்கும் அதிகமான அரிய பூமி உள்ளடக்கத்தைக் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு aரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை விரிவுபடுத்தியது மற்றும் வெளிநாட்டு ராணுவ பயன்பாட்டிற்காக அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதையும் தடை செய்தது.
கனிமங்கள் உண்மையில் அரிதாக இல்லாவிட்டாலும், பிரித்தெடுப்பதும் செயலாக்குவதும் கடினம். மேலும் இந்த பிர்வில் சீனா உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது, உலகின் விநியோகத்தில் 90% உற்பத்தி செய்கிறது. இந்தச் சுமையைச் சேர்த்து, அக்டோபர் 14 முதல் அமெரிக்கக் கப்பல்களுக்கு கூடுதல் துறைமுகக் கட்டணங்களை சீனா அறிமுகப்படுத்தியது. அமெரிக்க சிப் உற்பத்தி நிறுவனமான குவால்காம் மீது நம்பிக்கையற்ற விசாரணையைத் தொடங்கியது. இது வாஷிங்டனின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக அழுத்தத்திற்கு எதிரான பரந்த பதிலடியைக் குறிக்கிறது. இந்த சூழலில் தான் ட்ரம்ப் சீனா மீது 100 சதவிகித வரியை அறிவித்துள்ளார்.




















