China Rocket Update: சீனாவின் லாங் மார்ச் 5 பி ராக்கெட்.. மீண்டும் புவியை நோக்கி வரும் அபாயம்..
சீனாவின் லாங் மார்ச் 5 பி ராக்கெட் - வருகிற மே 8-ஆம் தேதி அளவில் புவியின் வளிமண்டல பகுதியை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் ஆய்வு நிலையத்தை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்பதுதான் சீனாவின் தற்போதைய முயற்சி, அதற்காக சீனா எடுத்திருக்கும் மூன்றாவது முயற்சிதான் லாங் மார்ச் 5 பி ராக்கெட், இந்த ராக்கெட் விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முதல் தொகுதியை எடுத்துக்கொண்டு பறந்தது. ஆனால் எதிர்பார்த்த இலக்கை ராக்கெட் அடையாததால் அது மீண்டும் புவியை நோக்கி வரக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு டியாங்யாங் 1 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது அதுவும் தனது இலக்கை அடையவில்லை. அதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் அனுப்பிய ராக்கெட் தனது இலக்கில் இருந்து தவறி ஆப்பிரிக்காவின் கடல் பகுதியில் விழுந்தது. ஆனால் அதன் சில பாகங்கள் சிதறி சில கட்டிடங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தின. அதன்பிறகு சீனா விண்வெளி ஆய்வு கூடத்தை அமைப்பதற்கான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்திருந்த நிலையில் , தனது அடுத்தகட்ட முயற்சியாக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி லாங் மார்ச் 5 பி ராக்கெட்டை ஏவியது . இது பூமிக்கு மேல கிட்டத்தட்ட 370 கிலோ மீட்டர் தூரத்தில் ,வருகிற 2022-ஆம் ஆண்டில் முழுமையாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராக்கெட் புவி வட்ட பாதையில் சுற்றித்திரிந்து தற்போது முழுமையான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வருகிற மே 8-ஆம் தேதி அளவில் புவியின் வளிமண்டல பகுதியை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 21 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் முழுவதும் எரிந்த நிலையில் பூமியை வந்தடைந்தாலும், அதன் பாதிப்பு என்பது சிறிய ரக விமான விபத்தினைப்போல இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரமால் கடல் பகுதியில் விழுவதற்கே பெரும்பாலும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு விண்வெளி ஆய்வுநிலையம் உள்ள நிலையில் சீனா தனக்கென ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க போராடி வருகிறது. இந்நிலையில் சீனா மீண்டும் தனது முயற்சியை தொடங்குமா அல்லது கைவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்