Corona: உச்சத்தை தொடும் கொரோனா; தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்கச் சொன்ன உலக சுகாதார அமைப்பு
ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாக தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி:
இந்நிலையில், சீனா கொரோனா பரவல் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், இதுகுறித்து பேசுகையில், "சீனாவில் மாறி வரும் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலை கொண்டுள்ளது. பலர் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான வண்ணம் இருக்கிறது. நோயின் தீவிரத்தன்மை, மருத்துவமனைகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது போன்ற தகவல்களை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
சீனாவிற்கு உறுதுணை:
நாடு முழுவதும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துவதற்கு சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு தொடர் ஆதரவு அளிக்கும். மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குகிறோம்" என்றார்.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்:
கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இதை தொடர்ந்து, மக்கள் போராட்டம் காரணமாகவும், பொருளாதாரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் சீனாவில் திரும்பபெறப்பட்டது.
LIVE: Media briefing on global health issues with @DrTedros https://t.co/njr6ZlUbxe
— World Health Organization (WHO) (@WHO) December 21, 2022
இதற்கு பின்னர்தான், சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. அதிக ஆபத்தில் உள்ள முதியவர்கள் மத்தியில் இறப்பு சதவகிதம் அதிகரிக்ககூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட சுவாசக் கோளாறால் நேரடியாக இறந்தவர்கள் மட்டுமே இனி கொரோனா இறப்பு புள்ளிவிவரங்களின் கீழ் கணக்கிடப்படுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது.