Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Canada Election Result 2025: கனடா தேர்தலில் லிபரல் கட்சி கிட்டத்தட்ட வெற்றியை பதிவு செய்துள்ள போதிலும், பெரும்பான்மையை தவறிவிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த முழு விவரம் இதோ..

கனடா கூட்டாட்சி தேர்தலில், மார்க் கார்னேவின் லிபரல் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. இருந்தாலும், சில சீட்டுகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை தவற விட்டுள்ளது. எனினும், மார்க் கார்னே மைனாரிட்டி அரசை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா கூட்டாட்சி தேர்தல் - லிபரல் கட்சி வெற்றி
கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில், பிரதமர் மார்க் கார்னேவின் லிபரல் கட்சிக்கும், பியர் பாய்லியெவ்ரேவின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்று, நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், இன்று முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தம் 343 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை.
தற்போதைய நிலவரத்தின்படி, லிபரல் கட்சி 167 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. எனினும், பெரும்பான்மையைவிட 5 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ளது. லிபரல் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி, 145 இடங்களை கைப்பற்றுகிறது. பிளாக் க்யூபெகாய்ஸ் கட்சி 23 இடங்களையும் மற்றவை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கருத்துக் கணிப்புகளில் பின்தங்கியிருந்த நிலையில், ட்ரம்ப்பின் வரி விதிப்புகள், ஒற்றுமை மற்றும் பாதிப்பு போன்றவற்றை முன்னிறுத்தி தனது வியூகத்தை அமைத்த மார்க் கார்னே, தற்போது வெற்றியை சுவைத்துள்ளார். அதே நேரம், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் லிபரல் கட்சியினரின் தவறான நிர்வாகத்தாலேயே, அமெரிக்காவிடமிருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இருப்பினும், மார்க் கார்னேவின் வியூகமே வெற்றி பெற்றுள்ளது.
வெற்றிக்குப்பின் மார்க் கார்னே என்ன பேசினார்.?
வெற்றி உறுதியான நிலையில், கனடா மக்களுக்காக தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர் மார்க் கார்னே, கனடா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக போராட உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடிய மக்களை பிரித்து, கனடாவை சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பதாகவும், ஆனால், அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறியுள்ளார். அதோடு, வரும் நாட்களில், இரு சுதந்திர நாடுகளின் இறையாண்மை குறித்து ட்ரம்புடன் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.
பிரதமருடன் இணைந்து பணியாற்றுவோம் - எதிர்க்கட்சித் தலைவர்
இதனிடையே, தேர்தலில் தோல்வியை தழுவிய கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பாய்லியெவ்ரே, ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிராக லிபரல் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம் என உறுதியளித்துள்ளார். பிரதமர் மற்றும் அனைத்து கட்சிகளுடன் இணைந்து, கனடாவின் நலன்களை பாதுகாக்கும் பொதுவான குறிக்கோளுடன், வரிகளை குறைக்கும் வகையில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பணியாற்றும் எனவும் பியர் தெரிவித்துள்ளார்.





















