Amit Shah: கேரளாவில் பாஜகவின் எழுச்சி! ஆட்சியை பிடிப்போம்.. சூளுரைத்த அமித் ஷா
நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் இதைச் சாதித்துவிட்டோம், இப்போது கேரளாவின் முறை. கேரளாவில் பாஜக முதல்வர் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கேரளாவில் பாஜகவின் ஆதரவு படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் இதனால் வரும் சட்ட்மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
கேரள மக்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள்:
"கேரள மக்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர். எங்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், நாங்கள் 11% வாக்குகளைப் பெற்றோம்; 2019 இல், இது 16% ஆக அதிகரித்தது, 2024 இல், இது 20% ஐ எட்டும். இப்போது, இந்த வாக்குப் பங்கு 20% இலிருந்து 30% மற்றும் 40% ஆக அதிகரிக்கும். 2026 இல் அதை நிரூபிப்போம்" என்று அவர் கூறினார்.
இப்போது கேரளாவின் முறை...
"நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் இதைச் சாதித்துவிட்டோம், இப்போது கேரளாவின் முறை. கேரளாவில் பாஜக முதல்வர் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். கேரளாவில் இந்த மாற்றம் நகரங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் 30 கிராம பஞ்சாயத்துகள், இரண்டு நகராட்சிகளை வென்றுள்ளோம், மேலும் எங்கள் மேயர் தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார்" என்று அவர் கூறினார்.
நூற்றுக்கணக்கான எங்கள் கட்சித் தொண்டர்களின் தியாகங்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது என்று அமித் ஷா கூறினார். அவர்கள் தங்களால் இயன்றதையெல்லாம் செய்தனர். ஒட்டுமொத்த பாஜகவின் சார்பாக, சிறையில் தண்டனை அனுபவித்த நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த வெற்றியை பணிவுடன் அர்ப்பணிப்பதாக அமித் ஷா கூறினார்.
வெளிநாடு பணத்தை நம்பும் அரசு
எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் அரசாங்கங்கள் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பணத்தை நம்பியிருப்பதாக விமர்சித்தார். மாநிலத்தில் ஒரு சீரான வளர்ச்சி மாதிரியின் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.
பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்த அவர் ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, பணம் அனுப்பும் அடிப்படையிலான வளர்ச்சிக்கு அப்பால் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.
கேரளாவில் உள்ள இரு கட்சிகளின் அரசாங்கங்களும் வெளிநாடுகளில் பணிபுரியும் கேரள மக்கள் அனுப்பும் பணத்தில் திருப்தி அடைகின்றன. வெளிநாடுகளில் பணிபுரியும் கேரள மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் இந்த அரசாங்கங்களில் இருப்பவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: அந்தக் குடும்பங்களைப் பராமரிப்பது கேரள அரசின் பொறுப்பல்லவா? வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பாத குடும்பங்களைக் கொண்ட மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது கேரள அரசின் பொறுப்பல்லவா?
ஒவ்வொரு மாநிலத்தையும் நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்'
உள்துறை அமைச்சர் கூறுகையில், "இன்று நான் கேரள மக்களுக்கு பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களை வளர்ந்த மாநிலங்களாக மாற்றியுள்ளன என்பதைச் சொல்ல வந்துள்ளேன். பிரதமர் மோடி உலகிற்கு ஒரு தனித்துவமான வளர்ச்சி மாதிரியை வழங்கியுள்ளார். பணம் அனுப்புவதை அடிப்படையாகக் கொண்ட ஒருதலைப்பட்ச வளர்ச்சி என்ற கருத்தையும் கேரளா கைவிட்டு, அதற்கு பதிலாக ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சிக்கும் திட்டமிட வேண்டும்" என்றார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு படைத்துள்ளதாகவும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டைப் பெற்று, எல்.டி.எஃப்-இன் 40 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கேரளாவில் பாஜகவின் கால்:
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில், திருவனந்தபுரத்தில் உள்ள 101 மாநகராட்சி வார்டுகளில் 50 இடங்களை பாஜக கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 50 இடங்களும், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 29 இடங்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 19 இடங்களும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 2 இடங்களும் கிடைத்தன. பாஜகவின் வெற்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் பெரும் அடியாகும். தேசிய ஜனநாயக கூட்டணி அவர்களின் வாக்குப் பங்கை இழந்து வருகிறது. மாநிலத்தில் மூன்றாவது முன்னணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி வருகிறது.






















