Axiom 4 Space Mission: அடபோங்கப்பா..! 6வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியரின் விண்வெளி பயணம் - என்ன பிரச்னை?
Axiom 4 Space Mission: இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரை விண்வெளிக்கும் அனுப்பும், நாசாவின் ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Axiom 4 Space Mission: இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரை விண்வெளிக்கும் அனுப்பும், ஆக்சியம் 4 திட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் 4 திட்டம்:
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம், மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் ஏற்கனவே ஆறு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த பயணம், நாளை மறுநாள் அதாவது ஜுன் 22ம் தேதி தொடங்கவிருந்தது. இந்நிலையில், 6வது முறையாக ஆக்சியம் 4 பயணம் திட்டமிட்ட தேதியில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்திற்கான புதிய தேதி எதுவும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
ISS சொன்னது என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஆக்சியம் 4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகியவை பரிசீலித்து வருகின்றன. தற்போதைய சூழலில் திட்டமிட்டபடி ஜுன் 22ம் தேதி பயணத்தை மேற்கொள்ள முடியாது. புதிய பயண தேதியை விரைவில் நாசா அறிவிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தான் பிரச்னை?
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை ஆய்வகத்தின் ஸ்வெஸ்டா சேவை தொகுதியில் பின்புறத்தில் பெரும்பாலான பிரிவில் சமீபத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச விண்வெளி நிலைய செயல்பாடுகளை தொடர்ந்து மதிப்பீடு செய்ய கூடுதல் நேரம் தேவை என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி நிலையத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த அமைப்புகள் காரணமாக, கூடுதல் குழு உறுப்பினர்களுக்கு நிலையம் தயாராக இருப்பதை உறுதி செய்ய நாசா விரும்புகிறது. தரவுகளை மதிப்பாய்வு செய்ய தேவையான நேரத்தை நிறுவனம் எடுத்துக்கொள்கிறது என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
6வது முறையாக ஒத்திவைப்பு:
ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தின் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணி, நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணம் முதலில் மே 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அன்று பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜுன்.8, ஜுன்.10 மற்றும் ஜுன்.11 என அடுத்தடுத்து தேதிகளிலும், விதவிதமான பிரச்னைகள் உருவானதால் பயண திட்டம் கைவிடப்பட்டது. அந்த வகையில் ஆறாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் ஆக்சியம் 4 திட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனைத்து மருத்துவ மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பராமரிக்க, மே 14 முதல் சுபான்ஷு சுக்லா அடங்கிய 4 பேர் கொண்ட குழு புளோரிடாவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கான நேரம் ஜூன் 30 வரை திறந்திருக்கும். ஆனால், ஏதேனும் காரணத்தால், காலக்கெடு தவறவிட்டால், ஜூலை மாத நடுப்பகுதியில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.




















