Shubhanshu Shukla: யார் இந்த சுபான்ஷு சுக்லா? சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர் - பயண நாட்கள், விவரம்
Shubhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும், முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

Shubhanshu Shukla: சுபான்ஷு சுக்லா இடம்பெற்றுள்ள Ax-4 Mission எனும் விண்வெளி பயணம் வரும் மே 29ம் தேதி தொடங்குகிறது.
சுபான்ஷு சுக்லா - விண்வெளி பயணம்:
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை மேற்கொள்ள, இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. மே 29ம் தேதி தொடங்கும் Ax-4 Mission எனும் பயணத்தின் மூலம் , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார். விண்வெளிக்கு செல்லும் விமானப்படையை சேர்ந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார். முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, 1984ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சோபியத் சோயுஸ் T-11 மூலம் விண்வெளி சென்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி நிலைய பயணம்:
இந்திய விமானப்படையைச் சேர்ந்த 39 வயதான சுபான்ஷு சுக்லா, நாசாவுடன் இணைந்து விண்வெளி பயண திட்டத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் Axiom Mission 4 திட்டத்தின் மூலமாக தான் தனது விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். வரும் 29ம் தேதியன்று ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், 4 பேர் அடங்கிய சுபான்ஷுவின் குழு ட்ராகன் கேப்சுயூலில் விண்வெளிக்கு பயணிக்கிறது. தொடர்ந்து பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, அங்கு இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
முதல் இந்தியராக ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்று திரும்பிய அடுத்த வருடமான, 1985ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி லக்னோவின் திரிவேனி நகரில் பிறந்தவர் தான் சுபான்ஷு சுக்லா. மனிதனை விண்வெளிக்கும் அனுப்ப வேண்டும் என்ற திட்டம் இந்தியாவில் பேசுபொருளாக கூட இல்லாத காலத்தில், இளம் வயதில் கண்ட விமான சாகச நிகழ்ச்சி தான் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடைசி நேரத்தில் விலகிய தனது நண்பர் வைத்திருந்த படிவத்தை பெற்று, பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் தனது 16வது வயதில் தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கு விண்ணப்பித்துள்ளார். இதே பாணியை பின்பற்றி தான், 2019ம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கும் பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே விண்ணப்பித்துள்ளார்.
விமானப்படையில் ”குஞ்சன்”
லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசோரி பள்ளியின் முன்னாள் மாணவரான சுபான்ஷு, கடந்த 2006ம் ஆண்டு இந்தியா விமானப்படையில் இணைந்தார். பல ஆண்டுகள் போர் விமானக் குழுவின் தலைவராகவும், சோதனை விமானியாகவும் திறம்பட செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளார். Su-30 MKI, MiG-21, ஜாகுவார், ஹாவ்க், டோர்னியர் மற்றும் An-32 போன்ற விமானங்களில் 2,000 மணிநேரங்களுக்கு மேல் பறந்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த கவனம் கொண்ட இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செல்லமாக ”குஞ்சன்” என அழைக்கின்றனர். இவரது மனைவி ஒரு பல் மருத்துவர். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
ககன்யான் திட்டத்தில் சுபான்ஷு:
ககன்யான் திட்டத்திற்கான தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக இஸ்ரோ இந்திய விமானப்படையை அணுகியபோது, விண்ணப்பித்த சுபான்ஷு இந்த திட்டத்திற்கான சரியான நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து உடல் மற்றும் மனநிலை என பல்வேறு பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று, இறுதி செய்யப்பட்ட 4 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் சுபான்ஷு சுக்லாவுடன் குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், அர்ஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகியோரும் அடங்குவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தான், ஆக்சியாம் ஸ்பேஸ் நிறுவனத்தின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான நான்காவது பயணத்திற்கான குழுவில் சுபான்ஷு தேர்வானார். இதன் மூலம், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய விண்வெளி பயணக்குழுவில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சுபான்ஷுவின் குழு:
இந்த பயணத்தில் சுபான்ஷு “SHUX” என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது குழுவை, அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான பெக்கி விட்சன் வழிநடத்த, ஸ்லாவோஸின் உஜன்ஸ்கி மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் டிபோர் காப்பு ஆகியோரும் இணைகின்றனர். Ax-4 Mission பயணத்திற்காக அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர், கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் சிமுலேஷன் ஆய்வகம் என பல இடங்களில் சுபான்ஷு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் விண்வெளியில் எப்படி செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு வாரம் காலம் விண்வெளியில் தங்க திட்டமிட்டுள்ள சுபான்ஷுவின் குழு, அறிவியல் பரிசோதனைகள், புவி கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
இந்தியாவிற்கு எப்படி உதவும்?
விண்வெளி பயணத்திற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுபான்ஷு, ”ஆக்சியம் ஸ்பேஷ் விண்வெளி பயணத்தின் மூலம் கிடைக்கும் அனுபவமானது, இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்தியராக நான் தனித்து பயணிக்கலாம். ஆனால், 140 கோடி மக்களின் கனவு என்னுடன் பயணிக்கிறது.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பயணத்தின் போது இந்திய உணவுகளை தன்னுடன் எடுத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு வார கால விண்வெளி பயணம் முடிவடைந்ததும், சுபான்ஷு மீண்டும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் இணைவார். அடுத்த ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு செலுத்தும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















