Mexico Bus Crash: மெக்ஸிகோவில் பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..
மெக்ஸிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதியதில் சுமார் 7 பேர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்காவில் இருக்கும் மெக்ஸிகோ மாநகரில் இருக்கும் குவெரேடாரோ மாகாணாத்தில் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் அங்கு அருகிலுள்ள தொழிற்சாலை பணியாளர்கள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எல் மார்க்ஸ்வெஸ் நகரில் இருக்கும் தண்டாவாளம் அருகே பேருந்து சென்றது. பேருந்து சென்ற நேரத்தில் தண்டவாளத்தில் ரயிலும் வந்துக் கொண்டிருந்தது. அந்த தண்டவாளத்தில் கேட் அல்லது சிக்னல் எதுவும் இல்லாத காரணத்தால் பேருந்து அந்த தண்டவாளத்தை கடைக்க பேருந்து ஓட்டுனர் முயற்சி செய்தார்.
சிக்னல் இல்லாத காரணத்தால் ரயில் வந்தது பேருந்து ஓட்டுனருக்கு தெரியவில்லை. இதனால் பேருந்து ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது வேகமாக வந்த ரயில் பேருந்து மீது மோதியது. ரயில் மோதியதில் பேருந்து சுமார் 50 மீட்டர் வரை தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பேருந்து மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 17 பேரை மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேருந்து மீது ரயில் மோது இழுத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்ஸிகோவில் உள்ள 7 ஆயிரம் ரெயில் பாதைகளில் சுமார் 1,500 -ல் மட்டுமே சிக்னல் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே ரெயில்வே கிராசிங்குகளில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்திடம் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம், தெற்கு மெக்ஸிகோ மாநிலமான ஓக்ஸாகாவில் பேருந்து ஒன்று சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏப்ரல் மாதத்தில், மேற்கு மெக்ஸிகோவில் ஒரு குன்றிலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 18 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். டிசம்பர் 2021 இல், சியாபாஸ் மாநிலத்தில் சுமார் 166 பேருடன் சென்ற டிரக் விபத்துக்குள்ளானது. அதில் 54 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.