"மோடி சரியான விஷயத்தை செய்வார்" போன் காலில் நண்பர் டிரம்ப் என்ன பேசினார்?
அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, முதல்முறையாக இந்திய பிரதமர் மோடியிடம் டிரம்ப் இன்று போனில் பேசியுள்ளார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இரண்டு தலைவர்களும் உரையாடியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் இன்று பேசியுள்ளனர். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இரண்டு தலைவர்களும் உரையாடியுள்ளனர். இந்தோ - பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளின் பாதுகாப்பு குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.
டிரம்பிடம் போன் போட்டு பேசிய மோடி:
கடந்தாண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, ஜனவரி 20ஆம் தேதி, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, முதல்முறையாக இந்திய பிரதமர் மோடியிடம் டிரம்ப் இன்று போனில் பேசியுள்ளார்.
மோடி உடனான உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இன்று (திங்கட்கிழமை) காலை அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது" என்றார்.
இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்றம்:
இந்தியர்களின் குடியேற்றம் குறித்து பேசிய டிரம்ப், "சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்த இந்திய குடியேற்றவாசிகளை திரும்ப அழைத்து கொள்வது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி சரியானதைச் செய்வார்.
இரு தலைவர்களுக்கும் இடையே முன்கூட்டியே சந்திப்பை நடத்த இந்திய தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபரின் முதல் பதவிக்காலத்தில் அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் நெருக்கமான உறவை பேணி வந்தனர்.
டிரம்ப்பை அன்பு நண்பர் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதி பூண்டுள்ளோம் என்றார். டிரம்ப் உடனான உரையாடல் குறித்து பேசிய மோடி, "நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.
ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியாவை விமர்சித்து டிரம்ப் பரப்புரை மேற்கொண்டார். வர்த்தகத்தில் இந்தியா நியாயமற்று நடந்து கொள்வதாகவும் வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருகள்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

