நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதை முன்பே கண்டுபிடித்த அமெரிக்க கடற்படை! இருப்பினும் மீட்பு பணி ஏன்?
மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடி கண்டிபிடிக்கும் பணியில் பல்வேறு நாட்டு கடற்படைகள் ஈடுபடுட்டன.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை தேடி சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நீர்மூழ்கி கப்பலை தேடி கண்டிபிடிக்க கடந்த 5 நாள்களாக மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கப்பல் வெடித்து சிதறிவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் மாயமான இடத்தில் இருந்து வெளியான வெடிப்பு சத்தம்:
மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடி கண்டிபிடிக்கும் பணியில் பல்வேறு நாட்டு கடற்படைகள் ஈடுபடுட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிக்னல் கட்டான இடத்தில் வெடிவிபத்து நடந்ததை அமெரிக்க கடற்படை கண்டுபிடித்துள்ளது. தகவல் கிடைத்த பிறகும், மீட்பு பணிகளை அமெரிக்க தொடர்ந்து வந்துள்ளது.
இது தொடர்பாக தற்போது அமெரிக்க கடற்படை விளக்கம் அளித்துள்ளது. "இது உறுதியான தகவலாக இல்லாத போதிலும், அமெரிக்க கடலோர காவல்படைக்கு உடனடியாக இது தொடர்பான தகவல் பகிரப்பட்டது. கப்பலில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதற்காக, தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டது" என அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கப்பல் வெடித்து சிதறியது தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட கடலோர காவல்படை, "டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் அதில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர். ரிமோட் வாகனம் முலம் நீருக்கடியில் கப்பலின் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலை தேடி சென்ற நீர்மூழ்கிக் கப்பல்:
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில், பனிமலையில் மோதி விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 1,500 பேர் உயிரிழந்தனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985ஆம் ஆண்டு, வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 3,800 மீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஏராளமான மக்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்க்க ஆர்வத்துடன் வருவார்கள். எனவே, Ocean Gate Expedition என்ற நிறுவனம் தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் சுற்றுலா பயணிகளை அப்பகுதிக்கு அழைத்து சென்று வருகிறது.
அதன்படி சுற்றுலா பயணிகளை கடந்த ஞாயிறு அன்று, டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மூலம் அழைத்துச் சென்றது. ஆனால், அந்த நீர்மூழ்கி கப்பல் கிளம்பிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை, பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.