Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் போய்விட்ட நிலையில், தன்னுடைய அரசியல் வாரிசுகளாக 3 மதகுருக்களை அவர் அறிவித்துள்ளார். அந்த பட்டியலில் அவரது மகனின் பெயர் இல்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களால், தனது உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் நிலவுவதை அடுத்து, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, தன்னுடைய அரசியல் வாரிசுகளாக 3 மதகுருக்களின் பெயர்களை அறிவித்துள்ளார். ஆனால் அதில் அவருடைய மகனின் பெயர் இல்லாதது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி
ஈரானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச தலைவராக ஆட்சிபுரிந்து வருகிறார் அயத்துல்லா காமேனி. மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படும் அவருடைய உயிருக்கு தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தன்னுடைய அரசியல் வாரிசுகளாக 3 மூத்த மதகுருமார்களின் பெயர்களை காமேனி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், தன்னுடைய 3 தசாப்தங்கள் ஆட்சியை அவர் முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடன் போர் நடைபெற்றுவரும் நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம், அந்த அரசியல் வாரிசுகள் பட்டியலில், காமேனியின் மகனும், மதகுருவுமான மோஜ்தாபாவின் பெயர் இல்லாததுதான். காமேனிக்குப் பிறகு இவர்தான தலைமை பொறுப்பிற்கு வருவார் என நீண்டகாலமாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடும்ப அரசியலை ஒழிக்கும் நோக்கில் காமேனி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இது, குடும்பத்திற்குள்ளேயே அதிகாரம் செல்வதை தடுத்து, இஸ்லாமிய குடியரசின் மத மற்றும் நிறுவன அடிப்படைகளை நிலைநிறுத்துவதன் மூலம் அதன் சட்டப்பூர்வமான தன்மையை பாதுகாக்கும் முயற்சியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
காமேனி பதுங்கு குழியில் தஞ்சமா.?
மேலும், ஈரான் அதிகாரிகளின் தகவலின்படி, காமேனி அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு, பாதுகாப்பான பாதாள பதங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கிருந்து ராணுவத்தினருக்கு மட்டுமே அவர் கட்டளைகளை பிறப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த அவசர நடவடிக்கைகள், காமேனியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.
இதனால்தான், தனது உயிர் போகும் நிலை ஏற்பட்டால், தொடர்ந்து நிலைமைகளை சமாளித்து வழிநடத்தும் வகையில் அவர் அரசியல் வாரிசுகள் மற்றும் இஸ்லாமிய படைகளை வழிநடத்தும் முக்கிய பொறுப்புகளுக்கும் ஆட்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், ஈரானிற்கு, வெளியில் இருந்து ராணுவ அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், உள்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
காமேனியை மிரட்டிய ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காமேனி எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் உடனடியாக அவரை கொல்ல மாட்டேன், ஈரான் சரணடைய வேண்டும் என்று மிகவும் அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இதேபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரான் உச்ச தலைவர் காமேனியை கொன்றுவிடுவோம் என மிரட்டியிருந்தார்.
இதையடுத்துதான், ஈரான் தலைவர் காமேனி இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.






















