ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு... மாளிகையில் வைத்து கொல்லப்பட்ட தலிபான் ஆளுநர்... உச்சகட்ட பதற்றம்..!
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் ஆளுநர் மாளிகையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில், தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஸம்மில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் குறைந்த போதிலும், முக்கிய தலிபான் சார்பு நபர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஆளுநர் மாளிகையில் குண்டுவெடிப்பு:
அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் ஆளுநர் மாளிகையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில், தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஸம்மில் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக அந்த அமைப்பின் மிக மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
தலிபான் செய்தித் தொடர்பாளர் விளக்கம்:
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில் குறிப்பிடுகையில், "இஸ்லாமிய எதிரிகளால் ஆளுநர் வீர மரணம் அடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணமான நங்கர்ஹாரின் ஆளுநராக முஸம்மில் பதவி வகித்தபோது ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் போர் தொடுத்தார். கடந்த அக்டோபர் மாதம், அவர் பால்க் ஆளுநராக மாற்றப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு விவரிக்கையில், "இந்த தாக்குதலில் குறைந்தது மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தற்கொலைப்படை தாக்குதல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன"
பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார் இ ஷெரீப்பில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் உள்பரட 8 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள், எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் குண்டுவெடிப்பு:
சமீபத்தில், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தலைநகர் காபூலில் உள்ள அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே வெடுகுண்டு வெடித்ததாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து ரஷிய செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் வெளியிட்ட தகவலில், அமைச்சகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
காபூலில் நடந்த முந்தைய குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், 2021இல் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத குழுவின் பிராந்திய அமைப்பான Khorasan தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.