Bangladesh: வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து இளைஞர் கொலை.. 18 நாட்களில் 6 பேர்.. தொடரும் பதற்றம்!
இந்து மத மக்கள் தாங்கள் வங்கதேசத்தில் வாழ்வது அச்சத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்கு மீண்டும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 18 நாட்களில் இந்து சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட ஆறாவது கொடூரத் தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இந்த கொலையானது வங்கதேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சர்சிந்தூர் பஜாரில் ஜனவரி 6ம் தேதி இரவில் நடைபெற்றுள்ளது. பலாஷ் உபாசிலாவின் கீழ் செயல்பட்டு வரும் சந்தையில் மணி சக்கரவர்த்தி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த அந்த சந்தையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் மணி சக்கரவர்த்தி தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக அக்கம் பக்கத்து வியாபாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் வங்கதேச நாட்டில் வாழும் இந்து மதத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது. மணி சக்ரவர்த்தி ஷிப்பூர் உபாசிலாவில் உள்ள சதார்சார் யூனியனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் மிகவும் அமைதியானவர், அனைவருக்கும் நன்கு பழக்கமான தொழிலதிபர் என்றும், எவ்வித சர்ச்சைகளுக்கும் செல்லாதவர் எனவும் அந்த சந்தையில் வணிகம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே இந்து மத மக்கள் தாங்கள் வங்கதேசத்தில் வாழ்வது அச்சத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அரசு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக ஜனவரி 5ம் தேதி மாலை ஜஷோர் மாவட்டத்தில் மற்றொரு இந்து மதத்தைச் சேர்ந்த நபர் பொது இடத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மணிராம்பூர் மேட்டுக்குடி என்ற பகுதியில் வார்டு எண் 17ல் உள்ள கோபலியா பஜாரில் ராணா பிரதீப் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். அவர் கேசப்பூர் உபாசிலாவில் உள்ள அருவா கிராமத்தில் வசிப்பவர்.
ராணா பிரதாப் சந்தையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். மணிராம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடந்து வருவதாகவும், சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 18 நாட்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















