ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது!
இது பற்றிய செய்தி ஏபிபி நாடு இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது பணியைப் பாராட்டி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் இளம் கல்வியாளர் விருதினை அறிவித்தது.

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையேடு தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியர் மாருதி மாலனுக்கு திருப்பூர் ரோட்டரி சங்கம், இளம் கல்வியாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது. முன்னதாக மாலனின் முன்னெடுப்பு குறித்து ஏபிபி நாடு சார்பில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
ஆங்கில பட்டதாரி பயிற்சி ஆசிரியர்
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட, பட்டதாரி பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில் பி.எட். பயின்று வருகிறார். இவர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தை கற்பித்து வருகிறார்.
வினைச் சொற்கள், எளிமையான வாக்கியங்கள் ஆகியவை இந்தக் கையேட்டில் உரிய தமிழ் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. புது முயற்சியாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கையேட்டில் கியூ.ஆர்.கோடு தனியாக இடம்பெறச் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ஆங்கில பயிற்சிக்கான வீடியோவையும் பார்க்க முடியும்.

ஏஐ மூலம் ஆங்கிலப் பயிற்சி வீடியோக்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆங்கிலப் பயிற்சிக்கான சிறு சிறு வீடியோக்களையும் தயாரித்திருக்கிறார். குறிப்பாக இவர் தயாரித்த கியூ.ஆர். கோடுகள் அடங்கிய பயிற்சி ஏடு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இது பற்றிய செய்தி ஏபிபி நாடு இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது பணியைப் பாராட்டி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் இளம் கல்வியாளர் விருதினை அறிவித்தது.
தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இளங்கோ, மனோஜ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாருதி மாலனுக்கு இளம் கல்வியாளர் விருது வழங்கி கவுரவித்தனர்.
இதுகுறித்து வலங்கைமான் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சூரியகுமார் கூறும்போது, ’’ஏபிபி நாடு தளத்தில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து, வெளியூர் நண்பர்கள் அழைத்துப் பேசுவர். எப்போதுமே அதற்கு தனி ரீச் இருக்கும். இந்த செய்தியையும் அப்படித்தான் திருப்பூர் ரோட்டரியில் பார்த்து, விருது வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இந்த ஊக்கம் இதுபோன்ற இன்னும் பல பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமையும்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.






















