Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Honda Elevate Price: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் ஒரே எஸ்யுவி கார் மாடலான, எலிவேட்டின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Honda Elevate Price: ஹோண்டா நிறுவனத்தின் ஒரே எஸ்யுவி கார் மாடலான எலிவேட்டின் விலை, 60 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
விலையை உயர்த்தி அறிவித்த ஹோண்டா
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவான கம்பேக்கை பதிவு செய்ய ஹோண்டா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய சூழலில் உள்நாட்டில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று கார்கள் மட்டும் ப்ராண்ட் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஹோண்டா பேட்ஜில் கிடைக்கும் ஒரே ஒரு எஸ்யுவி எலிவேட் மட்டுமே ஆகும். இந்த சூழலில் அந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் விலையை உயர்த்தி ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
விற்பனையில் அசத்தும் ஹோண்டா எலிவேட்
உள்நாட்டு சந்தையில் மிகுந்த போட்டி நிலவும் 4.2 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட 13 கார்கள் அடங்கிய பிரிவில் எலிவேட் இடம்பெற்றுள்ளது. போட்டியாளர்கள் பலரை பின்னுக்கு தள்ளி கடந்த நவமபரில் இந்த பிரிவில், விற்பனையில் 6வது இடத்தை பிடித்தது. அதன்படி, ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 10.7 சதவிகிதமும், மாதத்திற்கு மாதம் ஒப்பிடுகையில் 16.01 சதவிகிதமும் உயர்ந்து நவம்பர் 2025ல் ஆயிரத்து 836 யூனிட்கள் விற்பனையாகின. தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த விற்பனை மேலும் அதிகரித்து, எலிவேட்டின் சுமார் 2 ஆயிரத்து 289 யூனிட்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது. விலைக்கு நிகரான அம்சங்கள், வசதிகள், வலுவான கட்டமைப்பு கொண்டிருப்பதாக பயனர்களால் பாராட்டப்பட்ட நிலையில், விலையை உயர்த்தி ஹோண்டா அதிர்ச்சி அளித்துள்ளது.

எலிவேட்டின் விலை உயர்வு..
அடிப்படை வேரியண்ட் தொடங்கி டாப் எண்ட் வேரியண்ட் வரையில், குறைந்தபட்சம் ரூ.9,990 தொடங்கி ரூ.60,000 வரையில் எலிவேட் மீது ஹோண்டா விலை (எக்ஸ் - ஷோரூம்) உயர்வை அறிவித்துள்ளது. இது சீரானதாகவும், வேரியண்ட் அடிப்படையானதகாவும் இல்லை. அதிகபட்ச விலை உயர்வானது பேஸ் வேரியண்டான எஸ்வி மீது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலிவேட்டின் தொடக்க விலையானது, 11 லட்சம் ரூபாயிலிருந்து 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக மாற்றம் கண்டுள்ளது.

ஹோண்டா எலிவேட் கார் விலை பட்டியல்
| எலிவேட் வேரியண்ட் | புதிய விலை (ரூ. லட்சம்) | பழைய விலை (ரூ. லட்சம்) | வித்தியாசம் |
| SV (மேனுவல்) | 11.6 | 11 | 59,900 |
| V (மேனுவல்) | 12.06 | 11.96 | 9,990 |
| VX (மேனுவல்) | 13.75 | 13.61 | 13,590 |
| ZX (மேனுவல்) | 14.98 | 14.88 | 9,990 |
| ZX Black (மேனுவல்) | 15.07 | 14.98 | 9,990 |
| V (CVT) | 13.22 | 13.12 | 9,990 |
| VX (CVT) | 14.91 | 14.77 | 13,590 |
| ZX (CVT) | 16.16 | 16.06 | 9,990 |
| ZX Black (CVT) | 16.25 | 16.15 | 9,990 |
எலிவேட் - வேரியண்ட்கள் அடிப்படையிலான விலை உயர்வு
V ட்ரிம்மின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு எடிஷன்கள் மீதும் ரூ.9,900 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேனுவல் எடிஷனின் விலையானது ரூ.11.96 லட்சத்தில் இருந்து ரூ.12.06 லட்சமாக உயர்ந்துள்ளது. CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்ட ஆட்டோமேடிக் எடிஷனின் விலை ரூ.13.12 லட்சத்தில் தொடங்கி ரூ.13.22 லட்சம் வரை நீள்கிறது. VX டிரிம்மின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு எடிஷன்கள் மீது ரூ.13,590 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ZX விலை ரூ.9,990 ஆகவும், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட டாப் எண்ட் வேரியண்டான ZX பிளாக் வேரியண்ட்களுக்கு ரூ.10,000-மும் விலை உயர்த்தப்பட்டு ரூ.16.25 லட்சமாக மாறியுள்ளது.






















