இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து டிரைவர் உள்பட 2 பேரை கொலை செய்த வழக்கில் காவலர், அரசு ஊழியர் உள்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விழுப்புரம் : உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து டிரைவர் உள்பட 2 பேரை கொலை செய்த வழக்கில் காவலர், அரசு ஊழியர் உள்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு கூறப்பட்டது.
தேர்தல் முன்விரோதம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த நக்கீரன் (30) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இப்பிரச்சினை தொடர்பாகவும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அரசு புறம்போக்கு இடத்தில் சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.
இரட்டை கொலை
இந்நிலையில் கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பரான காத்தவராயன் (50) என்பவரை அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயமடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
26 பேர் மீது வழக்கு பதிவு
இச்சம்பவம் குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (56), தமிழ்மணி (27), சிவபூஷணம் (45), புகழேந்தி (58), மணவாளன் (55), ராஜேந்திரன் (45), குமரவேல் (33), மார்க்கண்டேயன் (45), சுதாகர் (26), பழனிவேல் (38), முரளி (24), தமிழ்செல்வன் (35), அருள் (24), கனகராஜ் (55), மோகன் (27), சிவநாதன் (25), பிரபு (30), காளிபசுபதி (50), அர்ஜூணன் (55), மணி (57), பாரி (20), பார்த்திபன் (25), சபரிநாதன் (30), கண்ணன் (45), மாதவன் (30) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த வேளையிலேயே, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூணன், கண்ணன் ஆகிய 6 பேர் உடல்நலக்குறைவால் இறந்தனர்.
20 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் பரபரப்பான தீர்ப்பு கூறினார்.
கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு அவர்கள் கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராகவும், சபரிநாதன் திருவெண்ணெய்நல்லூரில் பொதுப்பணித்துறை ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.