Villupuram: திண்டிவனம் விசிக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
திண்டிவனம் விசிக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம்: திண்டிவனம் விசிக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வேம்பூண்டி காலனியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ரமணி என்கிற ரமணா (வயது 25). இவர் விசிக வேம்பூண்டி கிராம முகாம் செயலாளராக இருந்தார். இவர் தனது நண்பர்களுடன் திண்டிவனம் ரோஷணை கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆரீப்பாஷா (40) என்பவர் பெலாக்குப்பம் அருகே நடத்தி வரும் ஓட்டலுக்கு அடிக்கடி உணவு சாப்பிட செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போதெல்லாம் உணவு தரமாக இல்லை என்று குறை கூறியுள்ளார். இதனால் ரமணா மீது ஆரீப்பாஷாவுக்கு முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2.5.2010 அன்று இரவு ரமணா, தனது நண்பரான ஆட்டோ பாஸ்கருடன் ஆரீப்பாஷாவின் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது ஆரீப் பாஷாவிடம் வழக்கம் போல் உணவு தரமாக இல்லை என ரமணா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆரீப்பாஷா, அவரது தம்பி ரஹ்மான் (36), திண்டிவனம் ஆனந்தன் (24), வெண்மணியாத்தூர் செந்தில்வேல் (33), ரோஷணை சையது (31), பாஸ்கர் என்கிற வலைபாஸ்கர் (25), முருங்கப்பாக்கம் சீனிவாசன் (21), அவரப்பாக்கம் முகமதுகவுஸ் என்கிற சாதிக்பாஷா (26), அவரப்பாக்கம் துலுக்கானம் ராகவன் (24) ஆகிய 9 பேரும் சேர்ந்து ரமணாவை உருட்டுக்கட்டை, இரும்புக்குழாய் ஆகியவற்றால் சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற ஆட்டோ பாஸ்கர், கண்ணன் ஆகியோரையும் அவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரீப்பாஷா உள்ளிட்ட 9 பேர் மீதும் ரோஷணை போலீசார், கொலை வழக்கு மற்றும் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமதுகவுஸ் என்பவர் இறந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ஆரீப்பாஷா, ரஹ்மான், ஆனந்தன், செந்தில்வேல் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், சையது, பாஸ்கர், சீனிவாசன், ராகவன் ஆகிய 4 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆரீப்பாஷா உள்ளிட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்