ஆரோவில் அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் சிறுமி கடத்தலுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
விழுப்புரம்: ஆரோவில் அருகே 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள நாவர்குளம் பகுதியை சார்ந்த விக்கி என்ற இளைஞர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சார்ந்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோட்டக்குப்பாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்கியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணைமுடிந்து இன்று இறுதி தீர்ப்பினை வழங்கிய போக்சோ நீதிமன்ற நீதிபதி ஹெர்மிஸ் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் சிறுமி கடத்தலுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குழந்தையின் நலனே பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்
வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி,சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது. இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.