TN Rain: விழுப்புரம் நகர பகுதி குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் நகர பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கியுள்ள காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்
விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான தாமரை குளம், நகராட்சி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலையிலும் வீடுகளை சுற்றி முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த, பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழ தொடரும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டதோடு மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகள் பணிக்கு செல்வோர் பாதிப்படைந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் நகரத்தில் தாழ்வான பகுதியான தாமரை குளம் பகுதியில் மழை நீர் சாலையில் தேங்கி முழங்கால் அளவிற்கு நிற்கிறது. மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு சிரம்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு கனமழையின் போது தாமரை குளம் பகுதி மக்கள் வசிக்க கூடிய இடத்திலுள்ள கால்வாய்கள் வழியாக நீர் வெளியேறாமல் உள்ளதால் மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். கனமழையினால் தாமரை குளம் பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நகராட்சி மைதானத்தில் கழிவுநீருடன் மழை நீரும் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றன. இதோல் வண்டி மேடு அருகேயுள்ள தீயனைப்பு நிலையம் எதிரேயு சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
27 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை:
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசின் தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகங்களைத் தயார்படுத்த வேண்டும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
இதுதொடர்பான அறிக்கையில்,
14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.