விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோவில் ரகசிய அறை! 400 மது பாட்டில்கள் கடத்தல், போலீஸ் அதிரடி கைது!
புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு ஷேர் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து 400 மது பாட்டில்கள் கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் : புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு ஷேர் ஆட்டோவில் ஓட்டுனர் இருக்கை அடியில் அறை அமைத்து 400 மது பாட்டில்கள் கடத்தி வந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
ஷேர் ஆட்டோவில் ரகசிய அறை வைத்து மதுபாட்டில் கடத்தல்
விழுப்புரம் நகரபகுதியான அண்ணா நகர் பகுதியில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் தனி அறை அமைத்து அதில் மறைத்து புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விழுப்புரத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து விழுப்புரம் ஜி ஆர் பி தெருவை சார்ந்த சபாபதி என்பவரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 400 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்களை காரில் கடத்திய 3 பேர் கைது
இதேபோல், திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் மத்திய நுண்ணறிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், செங்கல்பட்டு திருமணி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சாரதி (27), அதே பகுதியை சேர்ந்த பாபு மகன் பிரவீன் (28), ராய் மகன் ராபின் (27) என்பதும், இவர்கள் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கொண்டு செங்கல்பட்டு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.





















