அரசு விழாவில் பாதியிலேயே புறப்பட்ட முதல்வர் - காரணம் என்ன..?
புதுச்சேரி : மின்சார வாகன கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி விழாவில் இருக்கைகள் காலியாக இருந்தாதல் பாதியிலே சென்றதால் பரபரப்பு
மின்சார வாகன கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி விழாவில் இருக்கைகள் காலியாக இருந்ததால் பாதியிலே சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மின்சார வாகன கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மின்சார வாகன கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மின்துறை செயலாளர் அருண், கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில் விழாவில் அதிகாரிகள் தவிர வேறுயாரும் கலந்துகொள்ளதாதல், இருக்கைகள் காலியாக இருந்ததை கண்டு விழாவின் பாதியிலே புறப்பட்டு சென்றார்.
கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காற்று மாசு இல்லாத சூழலை உருவாக்க மின்சார வாகனங்கள் பயன்படுகின்றன. சுற்றுலா நகரமான புதுவையில் புகையில்லாத சூழலை உருவாக்கவேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த வாகனங்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. குறைந்த மின்சார செலவில் அதிக தூரம் செல்ல முடியும். இந்த வாகனங்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பான உணர்வும் இருக்கும். புதுவையை பொறுத்தவரை மின்சார பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்க வங்கிகள் மூலம் கடன் வழங்கும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களை பயன்படுத்தி புதுவையை புகையில்லா நகரமாக மாற்றவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இந்த கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட மின்சார வாகன மற்றும் 2, 3 சக்கர வாகன விற்பனையாளர்கள், கார் டீலர்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி செய்யும் வகையில் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து 4-ந்தேதி மின்சார வாகன கண்காட்சி நடக்கிறது.