மரக்காணத்தில் கனமழை ! “மக்களை பாதுகாப்பா பாத்துக்கணும்” களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வின்போது அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என டோஸ் விட்ட அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் : வடகிழக்கு பருவமழை காரணமாக மரக்காணத்தில் பெய்து வரும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மரக்காணம் பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்காணம் மருத்துவமனை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூமிஸ்வரம் கோவில், புயல் பேரிடர் கால பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என டோஸ் விட்ட அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூமிஸ்வரன் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளிவரும் வடிகால் வாய்க்கால் நீர் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து கேட்ட பொழுது பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் பழனி ஆகியோர் மாறி மாறி குழப்பமாக பதில் கூறுகையில் கடுப்பான அமைச்சர் பொன்முடி முதலில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் பொதுமக்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி கூறுகையில்...
முதல்வரின் உத்தரவின் பேரில் மீனவர் பகுதிகளில் மழைக்காலங்களில் பாதுகாப்பாக தங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 12 முகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தங்குபவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீனவர் பகுதிகளில் மீனவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருக்கிறது. மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆனால் மீனவர்கள் முகாமுக்கு வருவதற்கு தயக்கம் இருந்தாலும் அவர்களை கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்- கடுப்பான அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இல்லாததால் அமைச்சர் பொன்முடி கடுப்பானார். பின்னர் வந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மழையை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை!
விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழக புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் பகுதிகளுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுமாறும் மேலும் அக்டோபர் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வப்பொழுதுவெளியிடப்படும் வானிலை முன் எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.