விழுப்புரம்: கொரோனா காலங்களில் மக்களை சந்திக்காத டாக்டர் ராமதாஸ் படுத்துக் கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிப்பார் என திண்டிவனத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேள்வி எழுபியுள்ளார்.
கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய மண்டல தேர்தல் பொறுப்பாளராக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளையும், 8 மண்டலமாக, தி.மு.க., பிரித்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்துள்ளது. அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆ.ராஜா, கனிமொழி ஆகிய ஏழு பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய, 8வது மண்டல பொறுப்பாளராக, அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், கொரோனா காலங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து உதவி செய்யாத பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் படுத்துக் கொண்டே ஐம்பது தொகுதிகளில் வெற்றி பெற போவதாக தெரிவித்து இருக்கிறார்கள். மக்களை சந்திக்காத அவர்கள் எப்படி 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காத நிலையில் திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும் தற்போது திடீர் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்கள் வீணாகிவிட்டது, இதற்கு காரணம் திடீர் பெய்த கனமழைதான் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.