இந்த மாவட்டத்தில் இப்படி ஒரு அதிசயமா....? ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் - எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 10th Result 2025: விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் பவித்ரா, பவியா ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சரியப்படுத்தினர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் பவித்ரா, பவியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சரியப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசு பள்ளிகள் உட்பட 362 பள்ளிகளில் பயின்ற 12,104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என மொத்தம் 23,716 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதில், 11,394 மாணவர்கள், 11,158 மாணவிகள் என மொத்தம் 22,552 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 94.13. மாணவிகள் 96.09. மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.09. இது கடந்தாண்டைவிட 0.98 சதவீதம் கூடுதலாகும். அரசு பள்ளிகள் 94.15 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 110 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 192 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கி நடைமுறை செய்தததால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 கல்வி ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விகிதம் உயர மாணவர்களின் கடின உழைப்பும், பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பும் முக்கிய காரணம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி பெற முழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இரட்டையர்கள் பவித்ரா, பவியா என்பவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சரியப்படுத்தினர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன் - வெண்ணிலா தம்பதி, இவர்களுக்கு பவித்ரா மற்றும் பவியா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலய மெட்ரிக் பள்ளியில் படித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருவரும் 500க்கு 457 மதிப்பெண் பெற்றனர். இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
எங்களுக்கே நம்ப முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இருவரில் ஒருவர் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும் மனம் பாதித்திருக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கூட இதுபோன்ற ஒற்றுமை மதிப்பெண் பெற்றதில்லை. ஆனால் இருவரும் பேசும்போதும், சிந்திக்கும்போது ஒரே மனநிலையை உணர்ந்திருக்கிறோம். அதேபோல், 'டிரெஸ்' ஒரே மாதிரி தான் அணிவோம், இருவரும் ஒன்றாக பரதநாட்டியம் கற்றுகொண்டோம் என மகிச்சியாக தெரிவித்தனர்.





















