மீண்டும் பரபரப்பான விழுப்புரம்... கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சார்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.
விழுப்புரம்: புதுச்சேரி பகுதியான மடுகரை பாக்கெட் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்த நபரை திருவெண்னைய்நல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் விஷ சாராயம் அருந்தி சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் அருகே உள்ள டி. குமாரமங்கலத்தை சார்நத ஜெயராமன் என்பவருக்கு அதே பகுதியை சார்ந்த முருகன் என்பவர் புதுச்சேரி மாநிலமான மடுக்கரை பகுதியிலிருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்துள்ளார். பாக்கெட் சாராயம் குடித்த ஜெயராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜெயராமன் முருகன் என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன. வாய்கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஜெயராமன் பாக்கெட் சாராயம் குடித்ததினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயராமன் உயிரிழந்ததால் பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்த முருகனை திருவென்னைய் நல்லூர் போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட்டுடன் ஒருவர் பட்டப் பகலில் வாட்டர் கேனில் சாராயத்தை கலந்து குடித்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தகைய சோகம் நிகழ்ந்துள்ளது.