50 ஆண்டுகள் கழித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஜமாபந்தியில் மீட்ட முதியவர்! எப்படி?
கடலூர்: பண்ருட்டி அருகே 50 ஆண்டுக்கு பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஜமாபந்தி மூலம் முதியவர் ஒருவர் மீட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு மூன்று சகோதரர்கள். இவருக்கு சொந்தமான இவரது குடும்பச் சொத்தை இவருக்குத் தெரியாமல் இவரது சகோதரர் மூலமாக வேறு ஒருவர் வாங்கியுள்ளார்.
இவருக்கு அப்போது வயது 17. அப்போது முதல் இந்தச் சொத்தை மீட்க இவர் போராடி வந்த நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது இந்தப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இவரது தொடர் முயற்சியால் பண்ருட்டி, திருவதிகையில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியர் சிவகார்த்திகேயனிடம் முறையிட்டார். வட்டாட்சியர் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் படிக்க: திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இவருக்கு பட்டா வழங்கலாம் என்று ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். ஐகோர்ட்டு நீதிபதிகள் இவருக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கான பட்டா நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. பட்டா நகல் வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற முதியவர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில் 50 ஆண்டுகால போராட்டத்தில் எனது தம்பி ,எனது மகன் ஆகியோரை இழந்தேன். தற்போது தான் சொத்து கிடைத்து இருக்கிறது என்றார்..
ஜமாபந்தி என்றால் என்ன?
ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்