ABP Nadu Impact: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணி துவக்கம்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணியினை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணியினை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.
பின்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வட்டங்கள், ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949 -1950 ஆம் ஆண்டு எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலது புற பிராதன கால்வாய்களான எரளுர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிராதன கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கு நீர் ஆதாரங்கள் கிடைக்கப்பெறுவதோடு, 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
2021-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. விவசாயிகளின் துயர் துடைக்கும் வண்ணம் சேதமடைந்த அணைக்கட்டினை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு தொடர்பான ஆய்வறிக்கை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது, தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, 2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களினால் சேதமடைந்த அணைக்கட்டினை ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. சேதமைடந்த அணைக்கட்டினை மறு கட்டுமானம் செய்வதால் 26 ஏரிகளுக்கும் தண்ணீர் சென்று 13,100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்யப்படுவதுடன், அணைக்கட்டினை சுற்றியுள்ள 35 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பழமை வாய்ந்த எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானம் செய்வதற்கு உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இத்திட்டம் உடனடியாக துவங்குவதற்கு உறுதுணையாக இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு சுற்றுப்புற கிராமத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
ABP நாடு செய்தி எதிரொலி
இதுகுறித்து கடந்த மாதம் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கால்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கால்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நேரடி வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளின் நீர் இருப்பு பற்றிய விவரம் கேட்டறியப்பட்டது.
மேலும், எல்லீஸ் அணைக்கட்டின் வலது புற வாய்க்கால்களான ரெட்டி வாய்க்கால் மற்றும் எரளுர் வாய்க்கால்களின் ஆற்று நீர் செல்லும் வகையில் வாய்க்கால்களின் தலைப்பு பகுதி தூர்வாரி ஆற்றின் உள்புறம் மண்கரை ஏற்படுத்தி வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டது. தற்போது, எல்லீஸ் அணைக்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பாக்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி அதற்கான கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.