காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்த இளைஞர் மரணம் - பணியிடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்
மேல்பாடி காவல் நிலைய எஸ்.ஐ கார்த்தியை கைது செய்ய வேண்டும், மற்ற காவலர்கள் மீது ST/SC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் (25). கடந்த 11ஆம் தேதி மாலை திடீரென மேல்பாடி காவல் நிலைய வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டு தீ குளித்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமார் பேசும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரல் ஆகின, அதில் திருவலம் காவல் நிலைய காவல்துறையினர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினார்கள். நான் பட்டியலின இளைஞர் என்பதால் மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் என்னை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு செருப்பால் அடித்தார். எப்போது பார்த்தாலும், சாதிப் பெயரைச் சொல்லியே அடிக்கிறார். என் தம்பி வழக்கில் என்னையும் சேர்த்துவிட்டுட்டு அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொன்னாலும் மிரட்டி வருகிறார். நெல் அறுவடை செய்யப்பட்ட பணம் வாங்குவதற்காக போய்க்கிட்டிருந்த என்னை மடக்கி, எஸ்.ஐ கார்த்திக் ஹெல்மெட்டாலயே என் தலையில அடித்தார். பின்னர் காவல் துறையினர் எனது வீட்டுக்கு வந்து அவதூறாக பேசுகின்றனர். நான் நெல் அறுக்கும் இயந்திரம் வைத்துள்ளேன் அதை ஓட்டிச்செல்லும் போது நிறுத்துகின்றனர். இதனால் எனக்கு அசிங்கமாக உள்ளது என கூறினார். இவ்வழக்கில் தொடர்புடைய மேல்பாடி காவல் நிலைய SI கார்த்தி தீயிட்டுக்கொண்ட சரத் மற்றும் அவரது தம்பி அஜித் தொடர்பான வழக்கை முறையாக கையாளாததால் கடந்த 13ஆம் தேதி பிணியிடம் மாற்றம் செய்யட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் நேற்று உயிரிழந்தார்.
இதனால் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது எஸ்.ஐ. கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சரத் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க உள்ளனர். இதனால் அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதம் ஏற்பாடத வண்ணம் அப்பகுதியில் திருவண்ணாமலை,வேலூர் மாவட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சரத் உயிரிழப்பு காரணமான மேல்பாடி காவல் நிலைய எஸ்.ஐ கார்த்தியை கைது செய்ய வேண்டும், மற்ற காவலர்கள் மீது ST/SC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிலமும், ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு கோடி நிவாரணமும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை காவல் துறையின் அத்துமீறலுக்கு எதிரான கூட்டு இயக்கம் மனு அளித்துள்ளனர்.