200 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு - திருவண்ணாமலையில் 4 பேர் கைது
சிலைகள் திருடு போய் இரண்டு மாதத்திலேயே கண்டுபிடித்த திருவண்ணாமலை காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தானிப்பாடி அருகே 200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது. அதில் 7 சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள மலமஞ்சனூர் புதூர் கிராமத்தின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலிருந்து மலையின் மீது 300 அடி உயரத்தில் பாறையின் இடுக்கில் குகையில் சித்தப்படையார் குகை கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவில் பலவருடங்கள் பழமையான கோவில், குகையின் உள்ளே 200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் ஈஸ்வரி 2 சிலைகளும், ஈஸ்வரன் தனியாக ஒரு சிலையும், வீரபத்ர சுவாமி ஐந்து சிலையும், விநாயகர், முருகர் என ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் கொண்ட 10 ஐம்பொன் சிலைகள் பாணையில் வைத்து இருந்தனர். அந்த சிலைகள் அனைத்தும் பானைகள் உடைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வாணாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர். மேலும் அந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கும் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்னர். அவர்களிடம் ஏழு ஐம்பொன் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அவர்களை வாணாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வாராபுரம் பகுதிக்கு உட்பட்ட நுக்காம்பாடி கிராமத்தை சேர்ந்த சதீஷ் வயது (25), மெய்யர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது (25), எனவும் மலமஞ்சனூர் மலைப்பகுதியில் இருந்த சுவாமி சிலைகள் திருடியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஐம்பொன் சிலைகள் நுக்கம்பாடி சதீஷ் மூலமாக மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் திவாகர் வயது (27) என்பவரிடம் விற்று தருவதாக கூறி இரண்டு சிலைகளை கொடுத்து அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சதீஷ், மணிகண்டன், மனமஞ்சனூர் மணிகண்டன், மயிலாடுதுறை திவாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஐம்பொன் சிலைகளை பத்திரமாக பறிமுதல் செய்து பின்னர் 4 நபர்களையும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று இந்த ஐம்பொன் சிலைகள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருடு போனது அப்போதும் அந்த சிலைகள் திருடு போன நாட்களில் இருந்து மூன்று மாதத்திற்குள் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் சிலைகள் திருடு போய் இரண்டு மாதத்திலேயே கண்டுபிடித்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி , தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி, தானிப்பாடி துணை ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினரை மலமஞ்சனூர் கிராம பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

