திருவண்ணாமலை: நகர் ஊரமைப்பு மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 3.50 லட்சம் பறிமுதல்
’’மாவட்ட நகர் நல அலுவலகத்தில் 1.5 லட்சமும் எதிரே இருந்த இடைத்தரகர்கள் அலுவகக்த்தில் 2 லட்சமும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 5 பேர் மீது வழக்குப்பதிவு’’
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்சாயத்து அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை, தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என அதிரடி சோதனை நடத்தினர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், வேலூர், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, உட்பட 38 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி உட்பட்ட மணலூர்பேட்டை சாலையில் தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பணியில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களை வெளியே எங்கும் செல்லாதவாறு கதவை பூட்டிக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் அலுவலக அறை முழுவதும் கண்காணித்ததோடு அங்கிருந்த மேஜை டிராயர், பீரோக்கள் என அனைத்தையும் திறந்து தீவிர சோதனையிட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.
திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் உதவி இயக்குனராக வேலூரை சேர்ந்த மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் நகரில் உள்ள 4 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்திற்கு கட்டிட அங்கீகாரம் வழங்க உதவி இயக்குனர் மோகன் என்பவர் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. முதற்கட்ட தகவலாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1.5 லட்சம் ரூபாய் இந்த அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் இந்த அலுவலகத்தின் எதிரே உள்ள இடைத்தரகர்கள் தனுஷ், அருணாச்சலம் உள்ளிட்ட மூன்று பேரின் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்...!