மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை - ஆ.ராசா
கலைஞர் எழுதிய அனைத்து இலக்கியங்களும் பாடல்களும் எழுத்துக்களும் இன்றளவும் உள்ளது. ஜெயலலிதாவிற்காக ஏதேனும் எழுத்துக்கள் உள்ளதா?.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன்உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொண்ட ஆ. ராசாவுக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நினைவுப் பரிசும் பொன்னாடையும் வழங்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா சிறப்புரை
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக இருந்தது. இந்தியாவிலேயே பிணத்தை எரிக்க கூட ஆள் இல்லாத நிலையில் இருந்தபோதுகூட இந்தியாவின் பிரதமர் மோடி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்யாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனா உடை அணிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் கொரோனோ தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தவர். மு க ஸ்டாலின் அடுத்த கட்ட சோதனையாக பெரும் மழை காலங்களில் தண்ணீரில் நீந்திக் கொண்டு சென்று அதிகாரிகளுக்கு 24 மணி நேரமும் கண்காணித்து உத்தரவிட்டு மழை வெள்ளத்தை வடிய செய்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து தமிழகத்தை விட்டு சென்ற நிலையில் ரூ.6 லட்சம் கோடி தமிழக அரசு கடனில் தத்தளித்தது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் கஜானாவை காலி செய்ததை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஊதாரி தனமாக செலவு செய்ததை வெளிக்காட்டுவதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி வந்தார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்த மாணவர்களின் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்று மூன்று லட்சம் முதல் 5 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான முழு செலவையும், தமிழக அரசே ஏற்கும் என்ற திட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக ஆபத்து காலத்தில் உதவுவதற்கு கூட கடவுள் இல்லாத நிலையில் தமிழக முதல்வர் கடவுளாக வருவார் என்பதை இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றி நிரூபித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 60 கோடி செலவு செய்யும் அதிமுக, தமிழகத்தையும், தமிழ் மக்கள் மனதிலும், தமிழகத்தை நிமிரச் செய்ய பல்வேறு ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை திட்டமாக்க போட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவருக்கு 80 கோடியில் பேனா வைப்பதால் என்ன தவறு. பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு முன்னுரிமை, அருந்ததியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தமிழ் மொழியை செம்மொழியாக செம்மொழி ஆக்கிய பெருமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்து இட்ட பேனாவிற்கு மெரினாவில் சிலை வைத்தால் குற்றம் கூறும் இவர்கள்,
கலைஞர் எழுதிய அனைத்து இலக்கியங்களும் பாடல்களும் எழுத்துக்களும் இன்றளவும் உள்ளது. ஜெயலலிதாவிற்காக ஏதேனும் எழுத்துக்கள் உள்ளதா?. அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் இருந்த பொழுது மதம் உச்சத்தில் இல்லை. ஆனால் இன்று மதத்தால் உச்சகட்ட ஆபத்து உள்ளது. ஆபத்தை எதிர்த்து நிற்க இந்தியாவில் மோடியை எதிர்க்க எந்த தலைவர்களுக்கும் துணிவு இல்லை, மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை. அண்ணா காலத்திலும் பெரியார் காலத்திலும் ஆர்எஸ்எஸ் பிஜேபி இல்லை. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியாவிலேயே காவியை விரட்டி அடித்து விட்டு அரசியல் சட்டத்தை சாசனத்தை காப்பாற்றக்கூடிய ஒரு நபராக தற்போது திகழ்ந்து வருகிறார்.
அமெரிக்க நிறுவனமான இண்டன் பார்க் என்ற நிறுவனம் அதானி குடும்பம் 10 லட்சம் கோடி அளவிற்கு கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்திருப்பதாக வெளியிட்டுள்ளது. அதற்கு ராகுல் காந்தி அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி மொரிசியஸ் போன்ற தீவுகளில் இருந்து எவ்வாறு வந்துள்ளது என்று தான் கேள்வி எழுப்பினார். மோடியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த அதானி ஆஸ்திரேலியா பிரதமர் முதல் இந்திய பிரதமர் வரை பிரதமர் மோடி அவரின் பரிந்துரையின் பெயரில் தான் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த மோடி பிரதமராக இருந்த மோடி, சீனா, பாகிஸ்தான் நாடுகள் கூட கண்டு பயப்படும் மோடி, 56 இன்ச் மார்பளவுக்கு சொந்தக்கார மோடி முதல்வர் மு க ஸ்டாலினை கண்டு பயப்படுகிறார். திமுக தொண்டன் கட்டும் கருப்பு சிகப்பு கரை வேட்டிக்கு கூட மோடி பயப்படுகிறார்.
பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இல்லாத ஆபத்து தற்பொழுது தமிழகத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை. தமிழகத்தில் தங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை. தமிழக முதல்வர் இந்தியாவையும் இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய வேலை தான் தமிழக முதல்வருக்கு உள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களின் வழியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, ஸ்டாலின் அவர்களின் தோள்களில் உள்ளது. இவ்வாறு பேசினார்.