பொன்னியம்மன் கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக 6 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது .
ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும்படி , மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
திருவலம் அருகே கோவில் சிலைகளை சேதம் செய்ததாக, பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 6 நபர்கள் கைது செய்துள்ளது காவல்துறை.
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கரிகிரி அருகே தீர்த்தகிரி மலை உள்ளது . இந்த மலையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது.
அதேபோல் இந்த கோவில் அடிவாரத்தில் உலகே புகழ்பெற்ற தோல் மற்றும் தொழு நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனை ( கரிகிரி மருத்துவமனை ) லட்சமிபுரம் கிராமத்தில் கடந்த 66 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரசித்திபெற்ற தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவிலின் பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை பராமரிக்க , மலை அடிவாரத்தில் கரிகிரி மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய கோவிலை கட்டி அங்கு தீர்த்தவாரி பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான , ராமர் , சீதை , லட்சுமணர் , கருடன் உள்ளிட்டோரின் சிமெண்டால் செய்யப்பட்ட சாமி சிலைகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர் . பொன்னியம்மன் கோவில் முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும் சிலைகளை வெளியில் எடுத்து மலை அடிவாரத்தில் பொங்கல் வைத்து வழிபாட்டு , பின்னர் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சொந்தமான இடத்திலே பூட்டி வைத்து பராமரித்து வருகின்றனர் .
மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அந்த சிறிய கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும்படி , மருத்துவமனை நிர்வாகம் கடந்த 8 ஆண்டுகாலமாக கோவில் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத கோவில் நிர்வாகத்தினர், தொடர்ந்து அராஜக போக்கை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகின்றது .
இதனிடையே , நேற்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் , தனது மருத்துவமனை ஊழியர்களை கொண்டு , ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவிலின் சாமி சிலைகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் கட்டிடப்பிரிவின் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ் சாலமன் (50) தலைமையில் மேலும் 7 மருத்துவமனை ஊழியர்கள் , சிலைகளை அப்புறப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர் .
அவர்கள் அப்புறப்படுத்தும்பொழுது ஒரு சுவாமி சிலையின் கை சேதப்படுத்தப்பட்டதாக கூறி , லட்சமிபுரம் கிராம மக்கள் , மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் , கோவில் நிர்வாகியான , லட்சுமிபுரம் , பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 60 ) என்பவர் திருவலம் காவல் நிலையத்தில் , கோவில் சிலைகளை ஒரு கும்பல் சேதப்படுத்தியுள்ளதாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் , உதவி ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் , தனியார் மருத்துவமனை ஊழியர்களான , பிரின்ஸ் சாலமன் , கோவிந்தராஜ் (51 ) , பிரகாஷ் (47 ) , மோகன் (40 ) விக்ரமாதித்யன் (38 ) மற்றும் மோகன்ராஜ் (28 ) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து , தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் காட்பாடி சப் - கோர்ட்டில் ஆஜர்படுத்தி , குடியாத்தம் கிளை சிறையில் நேற்று இரவு அடைத்தனர் .