பாலத்தில் சேஸிங்... 25 லட்சம் வழிப்பறி... கார் சாவியை பறித்த நண்பர்... பாதி பணம் ஒப்படைப்பு! சினிமா பாணியில் வழிப்பறி!
சுதாரித்த பாலாஜி , 11 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் வந்த ஸ்யலோ காரின் சாவியை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 50 ) , தொழில் அதிபரான இவர் , நாட்றம்பள்ளி அருகே கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்திவருகிறார். தவிர பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார் .
பல வருடங்களாக சூதாட்டம் ஆடும் பழக்கம் உடைய ஞானசேகரன் , கடந்த வருடம் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மோரசபள்ளி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப் ஒன்றில் சூதாடி 40 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதன்பிறகு தனது தந்தை இறந்துவிடவே கடந்த ஒரு வருட காலமாக , சூதாட்டத்தில் தலையிடாமல் இருந்துள்ளார் . சென்ற வரம் தனது தந்தையாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடியவே , இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்ற எண்ணத்தில் மோரசபள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் சூதாட்ட கிளுப்புக்கு நேற்று மீண்டும் சென்றுள்ளார் .
பாதுகாப்பிற்காக நாட்றம்பள்ளியில் உள்ள தனது நண்பர்களான பாலாஜி மற்றும் சிவக்குமார் என்பவர்களை அவரது காரில் உடன் அழைத்து சென்றுள்ளார் .
இந்த சம்பவம் குறித்த விரிவாக பேசிய காவல் துறை உயர்அதிகாரி ஒருவர் "5 லட்சரூபாய் கையில் எடுத்து சென்ற ஞானசேகரன் , சூதாட்டத்தில் , 17 .05 லட்சரூபாய் வரை வென்று , நேற்று இரவு சூதாட்ட கிளப்பில் இருந்து வெளியேறும் பொழுது 22 .05 லட்ச ரூபாயுடன் வெளியில் வந்துள்ளார் . பின்னர் தனது நண்பர்கள் பாலாஜி மற்றும் சிவகுமாருடன் நாட்றம்பள்ளி நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தார் . ஞானசேகரனின் காரை அவரது நண்பர் பாலாஜி ஓட்டி வந்துள்ளார் . இரவு 10 : 30 மணியளவில் அவர்களது கார் , வலையம்பட்டில் உள்ள 60 அடிக்கும் உயரமான ரயில்வே பாலத்தை கடக்கும் பொழுது . இவரது காரை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று, நடுப்பாலத்தில் இவர்களை வழிமறித்தது. அந்த ஸ்யலோ காரில் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றுள்ளது.
இந்நிலையில் ஞானசேகரன் உடன்வந்த பாலாஜி என்பவர் சுதாரித்துக்கொண்டு கொள்ளையர்கள் வந்த காரின் சாவியை எடுத்துக்கொண்டு தங்கள் பணத்தை கேட்கவே கொள்ளையர்கள் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த இரண்டு பைகளில் ஒரு பையில் வைத்திருந்த 11 லட்சத்தை திருப்பிக் கொடுத்து காரின் சாவியை கேட்டுள்ளனர் .
உடனடியாக சுதாரித்த பாலாஜி 11 லட்சரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் வந்த ஸ்யலோ காரின் சாவியை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளார். இந்த சம்பவங்களை நெடுஞ்சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் நின்று பார்க்க தொடங்கியதால், கும்பல் அதிகம் சேரவே , செய்வதறியாது திகைத்த கொள்ளையர்கள் உடனடியாக பாலாஜியின் கையில் கத்தியால் கீறி விட்டு காரை அங்கேயே விட்டுவிட்டு 11 .05 லட்சத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் உச்சியில் பிரச்சனை என அறிந்த வாணியம்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தபோது, ஞானசேகரன் தான் சூதாடி பணத்தை வென்று வந்ததை மறைத்து தான் ஒரு வியாபாரி எனவும் பைனான்சியர் எனவும் குடியாத்தம் பகுதியில் இருந்து தனக்கு வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கி பணம் ரூபாய் 25 லட்சத்தை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தபொழுது, பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் தனது பணம் 25 லட்சத்தையும் பறித்து சென்று விட்டதாகவும் கூறி நாடகமாடி உள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான காவல்துறையினர் ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் தான் சூதாடி கெண்டு வந்த பணத்தில் 11 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் தங்களிடம் இருந்து பறித்துச் சென்றனர் என்பதை ஒப்புக்கொண்ட ஞானசேகரன் தனது காரில் மறைத்து வைத்திருந்த பாக்கி பணமான 11 லட்சத்தை காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
மேலும் ஞானசேகரன் சூதாட்டக் கிளப்பில் பணத்தை வென்று பணத்துடன் வந்த பொழுது அங்கிருந்து நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த நபர்கள் ஞானசேகரனை வாணியம்பாடி அருகே வழிமறித்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது . மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட நிலையில் காரின் மேற்புறம் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட போலி நம்பர் பிளேட் ஒட்டப்பட்டு கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்தது .
போலீஸ் விசாரணையில் கொள்ளையன் ஒருவன் காவல்துறை சீருடையில் வந்ததும் தெரியவந்துள்ளது மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை அவர்கள் வந்த ஸ்யலோ காரிலே விட்டுச் சென்றுள்ளனர்.
அதில் ஒருவன் தான் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டையையும் சம்பவ இடத்தில் விட்டு விட்டுச்சென்றுள்ளான் . காவல்துறையினர் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்."என்று தெரிவித்தார் பெயரை வெளியில் சொல்ல விரும்பாத அந்த காவல் துறை உயர் அதிகாரி .
சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சூதாட்டத்தை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் , தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் .
இந்த சம்பவத்தை தொடர்ந்து சூதாட்டம் நடை பெற்றுவருவதை தடுக்க தவறிய பேர்ணாம்பட்டு ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார் .