ராணிப்பேட்டை அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் குப்புறக் கவிழ்ந்த கார் - சென்னையை சேர்ந்த சிறுமிகள் உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால், துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, வயது (15). முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா வயது (17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சொகுசு காரில் சென்றனர். இவர்கள் இரண்டு கார்களில் மொத்தம் 13 நபர்கள் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நேற்று காலை சென்னைக்குத் திரும்பிக்கொண்டு இருந்தனர். முகமது சலீம், அப்துல் ரசாக் குடும்பத்தினர் வந்த காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ( 32) வயதான விஜய் ஒட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெல் தொழிற்சாலை அருகே நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த ஆறு அடி பள்ளத்தில் கார் குப்புறக் கவிழ்ந்தது. உடனடியாக நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினர். இந்த விபத்தில், காருக்குள் இருந்த சிறுமிகளான தமசுல் பாத்திமா, மற்றும் சுமையா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் சிப்காட் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க நிகழ்வுக்கு சென்று விபத்தில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.