மேலும் அறிய
Advertisement
‛கோடநாடு வழக்கு மறுவிசாரணை; பழிவாங்கும் நடவடிக்கை இல்லை’ - மு.தமிமுன் அன்சாரி
இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஒருவர் மீது சுமத்தி அதன் வழியாக ஒருவரைத் துன்புறுத்த நினைத்தால் தான் அதன் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை . மு.தமிமுன் அன்சாரி .
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று நடந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் , கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார் . நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்பு தனியார் உணவகம் ஒன்றில் செய்தியாளர் சந்திப்பையும் மேற்கொண்டார் . அப்பொழுது அவர் தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில் நூலகம் ஒன்றையும், விழா மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்தார் . இதனைத் தொடர்ந்து உள்ளார் மக்களின் கோரிக்கைகளைக் குறித்துப் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் , ‛ஆம்பூரில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது . இது தொடர்பாக மக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்து குவியும் வண்ணமாக உள்ளது . எனவே மாவட்ட நிர்வாகம் ஆம்பூரில் அனைத்துப் பாழடைந்த சாலைகளையும் தரமான வகையில் சீரமைத்திடவும் , புதிதாகச் சாலைகளை அமைக்கவும் ஆவணம் செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அதேபோன்று ஆம்பூரில் தொழிற்சாலைகளும் அதனைச் சார்ந்து , அதிகளவில் தொழிலாளர்களும் வாழ்ந்துவரும் சூழ்நிலையில். ஆம்பூரில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை போதிய வசதிகள் அற்றதாகவும் , அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு குறைகளைக் கொண்டுள்ளதாகவும் , தொழிலாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்கள் .
ஆம்பூர் அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை , பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூட வசதிகள் இல்லாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கின்றது . எனவே தமிழக முதல்வர் அவர்கள் , இந்த விஷயத்தில் ஆம்பூரின் தொழில் வளர்ச்சி ,அதன் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி லாபம் மற்றும் தற்போதைய தொழிலாளர்களின் நிலை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளையும் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் .
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆம்பூரிலிருக்கும் ரெட்டித்தோப்பு மேம்பாலம் இன்னும் கட்டிமுடிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசலால் ஆம்பூர் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர் . உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு ரெட்டித்தோப்பு மேம்பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டி விரைந்து மேம்பாலம் கட்ட வேண்டும் என்று இந்த நேரத்தில் கோரிக்கை வைக்கிறேன் .
அதேபோல் 2015 இல் ஆம்பூர் கலவரத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளது . ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற பெண் காணாமல் போன வழக்கில், ஆம்பூரைச் சேர்ந்த ஜமில்அகமது(வயது 26) என்பவரை, பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேமராஜ் , 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார். விசாரணை முடிந்து ஜமில் அகமது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் உடல் நிலை மோசமான அவர், ஜூன், 26ல் சென்னை அரசு மருத்துவமனையில் இறந்தார். அன்று இரவு ஆம்பூரில் பயங்கர கலவரம் நடந்தது. அப்போதைய வேலூர் மாவட்ட எஸ்.பி., செந்தில் குமாரி உட்பட, 54 காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. டாஸ்மாக் கடை, காவல்துறை ஜீப், அரசு பேருந்து, கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 190 பேரைக் கைது செய்தனர்.
அதன் காரணமாக 150 கும் மேற்பட்டோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது . இந்த கலவரத்தால் பலர் கைகால்களை இழந்து இன்னும் இயல்பு நிலைமைக்குத் திரும்ப முடியாமல் இருப்பதால் தமிழ் நாடு அரசு கருணை அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்த வழக்கை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் . என்று தெரிவித்தார் .
மேலும் சட்டசபை எவ்வாறு நடந்து கொண்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு , எதிர்க் கட்சி துணைத் தலைவர் என்றும் பாராமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பாராட்டிப் பேசியது , முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாகக் கட்சிக்கு அப்பாற்பட்டு மனந்திறந்து முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதெல்லாம் சட்டசபை ஒரு நாகரிகமான எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது என்பது அனைவருக்கும் புலப்படுகின்றது . சட்டசபையில் இதே ஆரோக்கியம் தொடரவேண்டும் , தேர்தல் அரசியல் கூட்டணி அரசியல் இவற்றையெல்லாம் கடந்து மக்கள் பிரதிநிதிகள் கூடியிருக்கின்ற சட்டசபை கண்ணியமாக நடக்கின்றது என அனைவரும் பாராட்டுகின்றனர் . இந்த நிலை இப்படியே தொடர வேண்டும் .என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
கோடநாடு கொலை வழக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது திருப்பப்படுவதாக அதிமுக- வின் கருத்துக்குப் பதிலளித்த தமிமுன் அன்சாரி -'இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஒருவர் மீது சுமத்தி அதன் வழியாக ஒருவரைத் துன்புறுத்த நினைத்தால் அதன்பெயர் பழிவாங்கும் நடவடிக்கை . ஆனால் கோடநாட்டில் பொறுத்தவரை வெட்ட வெளிச்சமாக கொலை கொள்ளை நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே' .
இதன் தொடர்ச்சியாகத் தான் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . யார் குற்றவாளி , யார் நிரபராதி என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் . எனவே இந்த விஷயத்தில் தேவை அற்ற பதற்றம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து .
அதிமுக தரப்பு குற்றமற்றவர்கள் என்றால் அவர்கள் அதை நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர , வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் அவர்கள் மீதான சந்தேகத்தையே வலுக்கிறது . கோடநாடு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கையாகத் தான் நான் பார்க்கிறேன் , பழிவாங்கும் நடவடிக்கையெல்லாம் ஒன்றும் இல்லை .
ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பாக , உயர் கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி போதுமான விளக்கத்தைச் சட்டசபையில் கொடுத்துள்ளார் . இதில் எதிர்க்கட்சிக்கு இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நேரடியாக அவர்களது கோரிக்கையை முதல் அமைச்சரிடம் கொடுக்க வேண்டும் அதைத் தவிர்த்து சட்டசபை புறக்கணிப்பு எல்லாம் தேவை இல்லாத ஒன்றாகத்தான் பார்க்கிறேன் .
உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு " மனிதநேய ஜனநாயக கட்சி வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தே தேர்தலை எதிர்கொள்ளும் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைமையிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று தெரிவித்தார் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion