வேலூரில் சோகம்.... மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் 60 வயதான மேசாக். இவரது மகன் சாம்ராஜ் (DME) டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் தனது மகன் சாம்ராஜுக்கு வேலை வாய்ப்பு கேட்டு மனு அளிப்பதற்காக நேற்று காலை மேஷக் மற்றும் அவருடைய மகன் சாம்ராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். தந்தை மேஷாகை நிழலில் அமர வைத்து விட்டு மகன் சாம்ராஜ் மனு அளிப்பதற்காக அதனை பதிவு செய்யும் வரிசையில் காத்திருந்தபோது திடீரென தந்தை மேஷாக் மயங்கி சரிந்து கீழே விழுந்து சுயநினைவற்று இருந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் மகன் சாம்ராஜிற்கு ஓடிச்சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அருகில் இருந்த 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் மேஷாக்கை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேஷத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சாம்ராஜ் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறை தீர்வு கூட்டத்தில் மகனுடன் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேஷாக்கின் உறவினர்களிடம் கேட்டபோது, அவருக்கு எந்தவிதமான நோய் பாதிப்பும் இல்லை என்றும் அவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை என்றும் தெரிவித்தனர். உயிர் இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிக அளவில் நிலவி வரும் சூழலில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக 104 டிகிரி ஃபாரனிட் அளவுக்கு மேல் வெயில் வேலூர் மாவட்டத்தில் கொளுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வெயிலிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அதிகமான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. மனு அளிக்க வந்த பொதுமக்களில் ஒருவர் காத்திருந்து உயிரிழந்த நிலையில் குறை கேட்டு கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி காம்போரை ஆதங்கத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.