சுட சுட கரப்பான் பிரியாணி... தொடர்ந்து தரமற்ற உணவு வழங்கும் ஹோட்டல்.... உணவு பாதுகாப்பு துறை அலட்சியம்..!
ஆரணியில் உள்ள ஹோட்டலில் வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதுதொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் அதிக அளவில் அசைவ உணவகங்கள் மற்றும் கடைகள் ஏராளமாக இயங்கி வருகிறது. இந்த அசைவ உணவகத்தில் சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் பக்கோடா போன்ற பெயர்களில் விதவிதமாக அசைவ உணவு விற்பனை நடைபெற்று வருகிறது. ஆரணி மணிக்கூண்டு அருகே இயங்கி வரும் நியூ 5 ஸ்டார் என்ற அசைவ பிரியாணி சென்டர் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜான்சி ராணி ஆகியோர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் சாப்பிடுவதற்கு சிக்கன், மட்டன் பிரியாணி மற்றும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது மூர்த்தி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கடையின் மேலாளர் திருமூர்த்தியிடம் கேட்டதற்கு மேலாளர் அதற்கு, பிரியாணியில் இருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் நீங்கள் சாப்பிட்டதற்கு பில் தர வேண்டாம் என சமாதானம் படுத்தியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த மூர்த்தி, அவருடைய மனைவி ஜான்சி ராணி, ’நாங்கள் என்ன பொய் சொல்கிறோமா உங்கள் கண்களுக்கு எதிரே சாப்பிடும் பிரியாணியில் இப்படி கரப்பான் பூச்சி இருக்கிறது. ஏதோ தெரியாமல் தவறு நடந்து விட்டது என மன்னிப்பு கேட்காமல் பில் கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதா? நாங்கள் ஓசியில் கொடுத்தால் கரப்பான் பூச்சி பிரியாணியை சாப்பிட வேண்டுமா? எங்களுக்கு ஓசியில் பிரியாணி வேண்டாம் எனக் கூறி, மூர்த்தி சாப்பிட்ட மற்றும் ஆர்டர் செய்த பிரியாணி உணவுகளுக்கு பில் கொடுத்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக மூர்த்தி ஆரணியில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். புகார் தெரிவித்துவிட்டு வந்த பிறகு இதுவரை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மாதத்திற்கு முன்பு ஆரணியில் உள்ள தனியார் 5 ஸ்டார் அசைவ உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல் மே மாதம் இந்த அசைவ உணவகத்தில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகிய அசைவ உணவு சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்