குடியாத்தம் அருகே விசாரணை கைதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்கக் கொண்டுசெல்லும் பொது காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார் .
வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக கடந்த 3 வருடங்களாக முன்விரோதம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி ராஜேந்திரனுக்கும், மோகனின் மகன் சிவராமன் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவராமன் தாக்கியதில் காயமடைந்த ராஜேந்திரன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே சிவராமனுக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டு , தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது . ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (31) என்பவர் தீ வைத்ததால் மாட்டுக் கொட்டகை எரிந்துவிட்டதாக சிவராமன் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சிவராமன் அவரது மனைவி விஷ்ணு பிரியாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபொழுது சத்யராஜ் அவர்கள் இருவரையும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவராமன் மற்றும் அவருடைய மனைவியை வெட்டிய சத்யராஜ், அங்கு இருந்து தப்பித்துச் சென்றுவிட்டார் இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சத்தியராஜை குடியாத்தம் நீதிபதி முன்பு முன்னிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.
மேல்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சத்யராஜை நேற்று இரவு குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பு இரவு 11 மணியளவில் ஆஜர்படுத்தினர். பின்பு அவரை குடியாத்தம் கிளை சிறையில் அடைப்பதற்காகக் அழைத்துச் சென்ற நிலையில் சத்யராஜ் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் , மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
பிரபல திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனரின் வீட்டின் பூட்டை உடைத்து, வெள்ளி பொருட்கள், உயர்ரக வாட்சுகள், மற்றும் பட்டு புடவைகள் கொள்ளை, போலீசார் விசாரணை .
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பிரபல திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்னம், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்னைக்குச் சென்ற அவர், நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை குடியாத்தத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பார்த்த போது வீட்டின் முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உயர்ரக ரோலக்ஸ் வாட்சுகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டுப் புடவைகள் ஆகியவைகள் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஜூடோ ரத்தினம், இதுகுறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு அந்த குடியாத்தம் போலீசார். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.