சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம் - 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிவீதம் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி இதன் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி ஆகும். கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது கனமழையாக பொழிந்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்டதண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக் கெடுத்து வருவதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 8517அணைக்கு வினாடிக்கு கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால், நேற்று மாலை நிலவரப்படி அணையிலிருந்து 14673 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அப்படியே 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றி வருகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில, கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவில் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டதால், நீர் வரத்து தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு அதிகரித்து வருகிறது, அணையின் நீர்மட்டம் 117 அடிக்கு மேல் உபரி நீரை சேமித்து வைக்க முடியாது. மேலும், பாசன விதி முறைகளின் படி தண்ணீர் வெளியேற்ற வேண்டி இருப்பதால் தற்போது அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொளமஞ்சனூர், திருவடத்தனூர், புத்தூர் செக்கடி, எடத்தனூர்,ராயண்டபுரம், அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர், வாழவச்சனூர், சதாகுப்பம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தண்டராம்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும், தண்ணீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒலிபெருக்கி மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது சாத்தனூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளதால், தென் பெண்ணை ஆற்றில் 18 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, யாரும் செல்பி எடுக்கவோ குளிக்கவோ ஆற்றுப்பகுதிக்கு செல்லவேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் ஊழியர்களை நியமித்து, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.