அரசு பேருந்தில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி
திருவாரூரில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டம் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தமிழக முதலமைச்சர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அண்ணாரின் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் செல்லும் வகையில் 01.11.2021 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி இன்று திருவாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கஸ்தூர்பா காந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி, மடப்புரம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தொடர்;ந்து காலை 9:30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை காட்சிப்படுத்தப்படும். தொடர்ந்து நாளை 23.04.2022 காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பின்லே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேசிய அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தூய வளனார் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும்.
முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில்,மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேலுடையார் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் தியாகபாரி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.