Arvind Panagariya: நிதி ஆணையத்துக்கு புது தலைவர்! யார் இந்த அரவிந்த் பனகாரியா?
நிதி ஆணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவை வரையறுப்பதற்கு இந்திய அரசியலமைப்பு பிரிவு 280இன் கீழ் நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
நிதி ஆணையத்துக்கு புதிய தலைவர்:
அந்த வகையில், நிதி ஆணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவராக பதவி வகித்தவர் அரவிந்த் பனகாரியா.
இந்தியாவில் பிறந்த அரவிந்த் பனகாரியா, அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். நிதி ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். வருவாய்த்துறை இணை செயலாளராக பதவி வகித்த ரித்விக் ரஞ்சனம் பாண்டே, நிதி ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "ஆணையத்தின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் முறையே அவர்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து நிதி ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள தேதி வரை அல்லது அக்டோபர் 31, 2025 வரை பதவியில் இருப்பர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆணையத்துக்கு வழங்கப்பட்ட பணிகள்:
வரும் 2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்துக்குள் நிதி ஆணையம், தனது அறிக்கையினை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 2026-27 ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளில் இவர்களை ஈடுபட வைக்கும் நோக்கில் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, மத்திய, மாநில அரசுகளின் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை வெளியிட நிதி ஆணையம் வழக்கமாக 2 ஆண்டுகாலம் எடுத்து கொள்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், என்.கே. சிங் தலைமையில், பதினைந்தாவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் வரை விரிவுபடுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான முதல் அறிக்கை மற்றும் 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்ட காலத்திற்கான இறுதி அறிக்கை என இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க குழுவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரியை பகிர்ந்தளிப்பதற்கான பார்முலாவை வகுத்தல், பேரிடர் மேலாண்மைக்கு வழங்கப்படும் நிதியை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை நிதி ஆணையம் மேற்கொள்ள உள்ளது.
இதையும் படிக்க: 2024ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்த நியூசிலாந்து: பிறந்தது புத்தாண்டு..!