திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்
’’திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை'’
திருவாரூரில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தனியார் அரவை மில் லாரிகளில் இயக்கம் செய்வதை கண்டித்து திருவாரூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 500க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தாலுகாவில் மட்டும் தற்சமயம் 37 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் , அரவைக்காக மில்களுக்கு நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கும் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் செயல்பட்டுவரும் அரவை மில் நெல் மூட்டைகளை அரவை செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் பெற்று, தனது பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கங்களாஞ்சேரி எட்டியலூர் மருதவஞ்சேரி பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை இயக்கம் செய்து வருகிறது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வி.கே.எஸ் கண்ணன் தலைமையில் முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழு சார்பில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தலைவர் கண்ணன் கூறியதாவது:
திருவாரூர் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதனை நம்பி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் செய்துகொண்டு நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணியை செய்து வரும் நிலையில், தனியார் மில் உரிமையாளர்கள் தங்களது மில்லுக்கு ஒப்பந்தம் பெற்றதன் அடிப்படையில் தங்களது லாரிகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் மூட்டைகளை ஏற்றி வருகின்றனர்.
இதற்கென தனியாக வாடகை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் இதனால் திருவாரூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பலமுறை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.