ஓ.பன்னீர்செல்வம் அணியின் முப்பெரும் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு
மாநாட்டு பிளக்ஸ் பேனர்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முப்பெரும் விழா என குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன நடக்கும் என எதிர்பார்ப்பில் தொண்டர்கள்.
தேர்தல் ஆணையமும் நீதிமன்ற தீர்ப்புகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் அரசியல் களத்தில் தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள். இது பன்னீர்செல்வத்துக்கு திருப்புமுனை மாநாடாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் அழுத்தம், திருத்தமாக கூறி வந்தனர். இதற்கிடையே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தையும் கொடுத்து விட்டது. இது ஓ.பி.எஸ். தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் இன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறந்த தின விழா, கட்சியின் 51-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா மாநாட்டினை பிரமாண்டமாக நடத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. அ.தி.மு.க. கொடி, சின்னம் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். கொடியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். வழக்கமாக அ.தி.மு.க. கொடியில் அண்ணா உருவப்படம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தற்போது ஓ.பி.எஸ். அணியினர் உருவாக்கி உள்ள புதிய கொடியில் அண்ணா கை நீட்டும் இடத்தில் அவரது விரல்களில் இரட்டை இலை சின்னம் வட்டமிடப்பட்டு உள்ளது. சட்ட சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் மாநாட்டு பிளக்ஸ் பேனர்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முப்பெரும் விழா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த அ.தி.மு.க.வினர், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் ஓ.பி.எஸ். தரப்பினர் அ.தி.மு.க. பெயர், கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். அது மட்டும் அல்லாமல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நேற்று முந்தினம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர். ஒருபுறம் சட்ட சிக்கல்கள் மறுபுறம் மாநாட்டு ஆயத்தப் பணிகள் மேற்கொள்வதில் குறைந்த நாட்கள் என ஓ.பி.எஸ். அணி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்தார். ரெயில்வே நிர்வாக தரப்பு மைதானத்தை எங்களுக்கு 5 நாட்களுக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் ஏப்ரல் 20-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். குறுகிய நாட்களாக இருந்தாலும் திட்டமிட்டபடி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும் என தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இன்னமும் வழக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாக வில்லை. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., ஆகவே மாநாட்டு மேடையில் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறும்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு லட்சுமன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ராவுடன் மாநாடு தொடங்குகிறது. சரியாக மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டு பந்தலுக்கு வருகை தருவார். தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்து தொண்டர்களின் கரகோஷத்துடன் நடந்து சென்று மேடை ஏறுகிறார். இதில் ஓ.பி.எஸ். அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக 50,000 இருக்கைகள் போடப்பட உள்ளது.
மேலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வசதியாக கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு சப்பாத்தி ரோல், குடிநீர் பாட்டில்கள் அந்தந்த இருக்கை வரிசையில் கடைசியில் பாக்சுகளில் பொருத்தி அதில் வைக்கப்படும். 3 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், 2 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஓ.பி.எஸ்.க்கு கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும். கட்சியை தொண்டர்கள் வசம் ஆக்குவோம் என எதிர்பார்ப்பு நிறைவேறுமா?. . இதற்கிடையே கொடி, சின்னம் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநாட்டு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியபுரம் புதுக்கோட்டை சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.